தமிழகத்தின் நிழலுலக தாதா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தனபால், கம்போடியா நாட்டில் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டான். இந்த தகவலை காஞ்சிபுரம் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
தலைநகர் சென்னையின் புறநகர் மாவட்டமான காஞ்சிபுரம் ஏரியாவை உலுக்கி எடுத்த ரவுடி, ஸ்ரீதர் தனபால். காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீதர், ஒரு கட்டத்தில் ஆள் கடத்தல், நிலங்கள் அபகரிப்பு என தனது எல்லையை விரிவுபடுத்தினான்.
ஆள்பலம் இல்லாத பெரும் பணக்காரர்களை மிரட்டி, அவர்களின் சொத்துகளை அடிமாட்டு விலைக்கு எழுதி வாங்குவதுதான் இவனது பிரதான தொழில். அப்படி பறிக்கப்படும் சொத்துக்கள் அத்தனையையும் தனது பெயரில் வைத்திருந்தால் சிக்கல் என உணர்ந்து, வட மாநில பட்டு வியாபாரிகளின் கைகளுக்கு மாற்றி விடுவான். இப்படி இவனால் தனது சொத்து பத்துகளை இழந்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் காஞ்சிபுரத்தில் அதிகம்.
கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிக்கும் இவனது அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை கோரமாக கொலை செய்யவும் தயங்காதவன் ஸ்ரீதர்.இந்த வகையில் இவன் மீது பல கொலை, கொள்ளை, நில பகரிப்பு வழக்குகள் இருக்கின்றன. இத்தனை கொடூரங்களையும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என ஏதாவது ஒரு வெளிநாட்டில் இருந்து கொண்டு அரங்கேற்றுவதுதான் ஸ்ரீதரின் ஸ்பெஷாலிட்டி.
வெளிநாடுகளிலிருந்தே இண்டர்நெட் கால் மூலமாக இங்கிருக்கும் தொழில் அதிபர்கள்,பெரும் செல்வந்தர்களிடம் போனில் பேசி மிரட்டுவான். இதற்க்கு அவர்கள் மசியாவிட்டால்,தற்போது உன் மகன் அல்லது மகள் இந்த இடத்தில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கட்டுமா?’ என கேட்பான். அப்படி இவன் ஆட்களை அனுப்பி தூக்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இவனது அடாவடிகளுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கவே காஞ்சிபுரத்தில் பலரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்படியும் இவன் மீது கொலை,கொள்ளை,கொலை மிரட்டல், நிலங்களை மிரட்டி பிடுங்குவது என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர் தமிழக போலீஸார். இந்த நிலையில், பல ஆண்டுகளாக தேடப்பபட்டு வந்த ஸ்ரீதர் கம்போடியாவில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காஞ்சிபுரம் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில், இன்டர்போல் உதவியுடன் கண்காணிக்கப்பட்டான். முன்னதாக சவூதியில் இருந்த ஸ்ரீதர் பின்னர் கொழும்பு வழியாக, கம்போடியாவிற்கு தப்பிச் சென்றான். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘புதன்கிழமை இரவு 8 மணியளிவில் ஸ்ரீதர் தனபால் கம்போடியாவில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. கம்போடியாவில் இறந்த பின்னரே அவர் மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டான்.
ஸ்ரீதர் தான் இறப்பதற்கு முன்பாக, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறான். இந்தியாவிற்கு வர முடியாமல் போலீஸ் கொடுத்த நெருக்கடியே அவனது தற்கொலைக்கு காரணம் என ஸ்ரீதர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் வருடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு துபாயில் இருந்து ஸ்ரீதர் தனபால் பேட்டி கொடுக்கையில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டான். அப்போது, தமிழக போலீஸார் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவதற்கு தயாராக இருந்தால், இந்தியா திரும்பி வர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தான்.
2017-ஆம் வருடத்துடன் தனது பிஸினஸ் விசா முடியவுள்ளது என்றும், ஒருவேளை நான் இந்தியா திரும்பும் பட்சத்தில் போலீஸாரால் எண்கவுன்டர் செய்யப்படலாம் என்றும் தெரிவித்தான். அப்போதே, அவன் சயனைடு அருந்தி தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக டிஜிபி,அல்லது நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி மூலம் என்னிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படும் எனக்கூறி இந்தியாவிற்கு வரும்படி கேட்டுக்கொண்டால் நான் உடனடியாக இந்தியா திரும்ப தயார். அவர்கள் என்னை எண்கவுண்டர் செய்யக்கூடாது என்று துபாயில் இருந்த ஸ்ரீதர் தெரிவித்திருந்தான். சூதாட்டம்(கேஸினோ) விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஸ்ரீதர் தனபாலனுக்கு, ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து உள்ளதாம்.
துபாயில் வசித்துவந்த ஸ்ரீதர், அங்கு ஆயில் பிஸினஸ் நடத்தி வந்தான் என்றும், பின்னர் அவரது பாஸ்போட் முடக்கப்பட்டதனால் அவர் கொழும்பு மூலமாக கம்போடியா செல்ல நேரிட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்ரீதர் தனபால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றதை அடுத்து, தமிழக போலீஸார் மத்திய அரசு மற்றும் இன்டர்போல் ஆகியவற்றின் உதவியை நாடியது. ஸ்ரீதர் தனபாலின் மீதுள்ள மொத்தம் 43 வழக்குகளில், 7 வழக்குகள் கொலை வழக்காகும். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும்போது, யாரேனும் நிலத்தை தர மறுக்கும்பட்சத்தில் அவர்கள் மீது ஆட்களை வைத்து தாக்குதல் நடத்துவதிலும் ஸ்ரீதர் ஈடுபட்டுவந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஸ்ரீதருடன் தொடர்புடைய 7 பேரை காஞ்சிபுரம் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தனர்.அந்த ஏழு பேரில், ஒருவர் ஸ்ரீதரின் சகோதரரும் ஒருவர். அப்போது, காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்த ஸ்ரீதர் கைது செய்யப்பட்டர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும்,அப்படி இல்லாவிட்டால் அப்பகுதியில் உள்ள அனைத்து காவல்நிலையத்தையும் அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தான். இந்த விஷயத்தை டி.ஜி.பி-க்கு தெரியப்படுத்துமாறும், இன்ஸ்பெக்டரிடம் ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறான்.
சிங்கப்பூர் கப்பல்களில் நடத்தப்படும் கேஸினோவில் லைஃப்டைம் மெம்பர்ஷிப் பெற்றிருந்த ஸ்ரீதர்,அதில் கலந்துகொண்டு பொழுதை கழித்துவந்தான்.அதோடு, துபாயில், ஆடம்பர அபார்ட்மென்ட் மற்றும் ஆயில் பிஸினஸ், டேக்ஸி சர்வீஸ் போன்றவற்றையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
எனது தந்தை ஒரு விவசாயி, தாய் மாற்றுத்திறனாளி. எனது தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு தான் வீட்டுக்கே வருவார். இதனால், எனக்கு 2 வயது இருக்கும்போதே, தந்தையை விட்டு எனது தாய் பிரிந்து வந்துவிட்டார். ஏழாம் வகுப்புவரை பள்ளியில் படித்தேன். பின்னர், பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, பட்டு நெசவு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன் என்றான் ஸ்ரீதர் தனபால்.
மேலும், திருக்குறள், சங்கத் தமிழ் இலக்கியம், மகாபாரதம், கம்ப ராமாயணம், வால்மிகி ராமயணம் ஆகியவற்றை இளம் வயத்தில் விரும்பி படிப்பேன் என்று கூறியிருந்த ஸ்ரீதர் தனபால், அதில் உங்களுக்கு ஏதாவது வினாக்கள் தோன்றினால் என்னிடம் கேட்கலாம் என்றும் நேர்காணலின் போது தெரிவித்திருந்தான்.
2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீதர், அவனது ஆட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தானாம்.இதுகுறித்து அவன் கூறும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ரூ.3 லட்சம் மட்டுமே செலவு செய்தேன். எனது சார்பில் உதவி செய்யச் சென்றவர்களிடம், எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன் என்றும் கூறியிருந்தான்.