கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்துக்கு, வவுனியாவில் வழங்கப்பட்ட வீடு, அதனுடன் இணைந்த காணிக்குரிய உரிமைப் பத்திரங்கள் ஒன்றரை வருடங்களாகியும் அரசால் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி தெரிவித்ததாவது:
மகளின் படுகொலைக்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு சென்று அரச தலைவரைச் சந்தித்தேன். அதன்போது எமக்கு வீடு ஒன்றைக் கட்டித் தருவதாக அரச தலைவர் உறுதியளித்திருந்தார்.
அதனை வவுனியாவில் தருவதாகவும் அவர் கூறினார். அதன்படி வவுனியாவில் சுமார் 2 பரப்புக் காணியில் வீடு ஒன்று அமைத்துத் தரப்பட்டது. எனினும் சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்தும் அந்தக் காணிக்குரிய உறுதியோ வேறு ஆவணமோ இதுவரை எமக்குத் தரவில்லை.
இது தொடர்பில் காணி அமைச்சுக்குக் கடிதங்கள் எழுதிச் சலித்துவிட்டேன். இன்னும் பதிலில்லை.
மகளைப் படுகொலை செய்தவர்கள் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்குத் தரப்பட்ட வீட்டுக்கான உறுதிப் பத்திரங்கள் கிடைக்காமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்குக் கடிதம் மூலமாக முறையிட்டு உரிய தீர்வைத் தர நடவடிக்கை எடுக்குமாறு 2 வாரங்களுக்கு முன்னர் கோரியுள்ளேன். அவரின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.