சூடுபடுத்தி மீண்டும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!!

images (11)
ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும். நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. தவிர்க்க முடியாத சூழலில் ஓட்டல் உணவைச் சாப்பிட நேர்ந்தால், வாங்கிய உடனே சாப்பிட்டுவிட வேண்டும். பிரிட்ஜில் வைத்து, சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. பாலை எப்போது தேவையோ அப்போது மட்டும் அளவாகச் சூடேற்றி, அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். டீ-காபியை மீண்டும் சூடாக்கி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி-டீயை மறுபடியும் சூடேற்றினால், வேறு சுவையில் இருக்கும்.

கீரைகளை கண்டிப்பாக மறுமுறை சூடேற்றி உபயோகிக்கக் கூடாது. கீரைகளில் ‘நைட்ரேட்ஸ்‘ உள்ளது. பல மணி நேரம் கழித்து மறுபடியும் கீரையை சூடேற்றுவதால், அதில் உள்ள நைட்ரேட்ஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனமாக மாறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கீரைகளை தேவைக்கு ஏற்ப சமைத்து, உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும். பருப்பு மற்றும் தானியங்களை மீண்டும் சூடாக்குவதால் புரதச்சத்து அழிந்துவிடும்.

காளானை மறுமுறை சூடேற்றி பயன்படுத்தக் கூடாது. பச்சைக் காளான்களை நறுக்கும்போதே, அதில் உள்ள புரதச்சத்து அழியத் தொடங்கிவிடும். காளானில் இருக்கும் சத்தை முழுமையாகப் பெற, உடனடியாக சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளை சமைத்த பிறகு குளிரூட்டுவதும் மறுபடியும் சூடேற்றி பயன்படுத்துவதும் தவறு. புரதம் அதிகம் உள்ள மாமிச வகைகளை ஒருமுறைக்கு மேல் சூடேற்றுவதால், செரிமானபிரச்சினைகள், புட் பாய்சனிங் ஏற்படலாம். முட்டை உணவுக்கும் இது பொருந்தும்.