பெற்றோர்களே ! பாலகர்களின் மனங்களில் அழுத்தங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வை கெடுக்காதீர்கள்!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு (05) வெளியாகியுள்ள நிலையில் குறித்த புள்ளிகள் சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும்,சில மாணவர்களுக்கு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

children-school (1)

இந்த வேளையில் அவதானமாக ஒவ்வொரு விடயங்களையும் கையாள வேண்டிய பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பெற்றோர்களே.

எனவே இந்த தகவல் பெற்றோர்களுக்கானது.

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுக்கான பரீட்சை என்பதை விட இது பெற்றோருக்கான பரீட்சையாகவே காணக்கூடியதாக உள்ளது.

தரம் 4 இல் இருந்தே ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்துகின்றனர்.

இதற்காக அவர்களும் சேர்ந்து உழைப்பதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.

தமது பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தே ஆக வேண்டும் என்ற விருப்பில் பெற்றோர்களும் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.

இது வரவேற்கத்தக்க விடயமே..

ஆனால் பரீட்சை எழுதும் அந்த  மூன்று மணி நேரங்களே அவர்களது புள்ளிகளை தீர்மானிக்கின்றன.

முதலில் நன்றாக படித்த மாணவரால் பரீட்சையில் சரியாக தனது திறமையை காட்டமுடியாமல் போகலாம்.

எனவே புள்ளிகளை வைத்துக்கொண்டு தனது பிள்ளை சித்தியடையவில்லை என்று பெற்றோர்கள் முதலில் கவலைப்படுவதை நிறுத்தவேண்டும்.

உங்களது பிள்ளைகளால் இந்த பரீட்சையில் சித்தியடையாவிட்டால் அவர்களை ஏசுவதோ, அல்லது அடிப்பதோ,அல்லது அவர்களை தண்டிப்பதையோ நிறுத்தவேண்டும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையினை தாண்டும் மாணவர்களிற்கு இன்னும் பல படிகளை தாண்டவேண்டும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.

அவர்களை தேற்றி அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி அவர்களை ஆறுதல் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்கள், சகோதரர்கள்,உறவினர்கள், பாடசாலைசமூகத்திற்கு உண்டு.

சித்தியடைந்தால் அவர்களுக்கு என்ன எல்லாம் செய்வதாக திட்டமிட்டீர்களோ அதை சித்தியடையாவிட்டாலும் செய்து கொடுங்கள்.

10 வயது பாலகர்களின் மனங்களில் அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்களின் செயற்பாடுகள் அமையகூடாது.

வெட்டுப்புள்ளிக்கு குறைவான பெறுபேறு பெற்ற பிள்ளைகள் யாவரும் தோல்வியடைந்தவரல்ல முயன்று தவறியிருக்கிறார்கள்.

உங்கள் கௌரவத்திற்காக அக்குழந்தைகளை  புண்படுத்தி அவர்களை வாழ்க்கையில் தோல்வியடையச் செய்து விடாதீர்.

ஏனெனில் இது வெறும் ஒரு எழுத்துப்பரீட்சை மட்டுமே