உறுப்பினர் தகுதியை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் கருணாநிதி!!

உடல்நலமின்றி ஓய்வில் இருக்கும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் புகைப்படங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

_98168749_22228446_1713659191979612_1019676326309634656_n

தி.மு.கவில் தற்போது 15வது அமைப்புத் தேர்தல்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் தகுதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அக்கட்சியில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் தகுதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சிக்கான சந்தாவைச் செலுத்தி, முதல் உறுப்பினராக தன்னைப் புதுப்பித்துக்கொண்டு அதற்கான படிவத்தில் கையெழுத்திடுவது வழக்கம்.

1949ஆம் ஆண்டில் கட்சி துவங்கப்பட்டதிலிருந்து அக்கட்சியின் உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி, தனது கோபாலபுரம் இல்லத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உறுப்பினர் தகுதியை புதுப்பிக்கும் காட்சி மற்றும் கட்சிக்கான சந்தா செலுத்தும் காட்சியின் புகைப்படங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

உடல்நலமில்லாமல் தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் கருணாநிதி, கையெழுத்திடும் காட்சியும் சிரித்தபடி சந்தா செலுத்தும் காட்சியும் அக்கட்சியினரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.