6 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியீடு தடைபட்டது!!

தமிழகத்தில் கேளிக்கை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் திரையிடப்பட்டுள்ளன.

இன்று காலையில் வெறிச்சோடிய சத்தியம் திரையரங்கு

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. இதனால், அதிகபட்ச திரையரங்கக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 10 சதவீதம் அளவுக்கு கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும், திரையரங்கக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்து அறிவித்தது.

அதன்படி, இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களில் வெளியான கருப்பன், ஹரஹர மஹாதேவகி, ஸ்பைடர் (தமிழ், தெலுங்கு), துப்பறிவாளன், மகளிர் மட்டும் ஆகிய படங்களே திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

திரையரங்கு

இந்த வாரம், பொம்மி, உறுதிகொள், விழித்திரு, சோலோ, கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம் ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது.

தயாரிப்பாளர் சங்க அறிவிப்பையடுத்து சோலோ தவிர்த்த பிற படங்களின் வெளியீடு நிறுத்தப்பட்டது.

தமிழிலும் மலையாளத்திலும் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட சோலோ திரைப்படம் மட்டும் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், இன்று காலை காட்சிக்கு சென்றபோது பழைய படங்களே திரையிடப்படுவதாகவும் விரும்பாதவர்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படுமென்றும் திரையரங்கங்களில் தெரிவிக்கப்பட்டது.

“படங்களை வெளியிடுவதில்லையென தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துவிட்ட நிலையில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா வாரமும் திரைப்படங்கள் வெளியாவதில்லையே? கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள் இப்போதும் ஓடுகின்றன. அதனால், திரையரங்குகள் மூடப்படவில்லை” என்று தெரிவித்தார் தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன்.

திரையங்கு

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இதனால், கூடுதல் வசூல் கிடைக்குமென்றாலும் இந்த வாரம் படத்தை வெளியிட நினைத்திருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குழப்பத்தில்தான் உள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால், இந்த வாரத்தில்தான் நிறைய படங்கள் வெளியாகவிருந்தது.