தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜெய், சில தினங்களுக்கு முன்பு இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பும் போது அடையார் அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது. கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும், பிரேம்ஜியும் காருக்குள்ளேயே மயக்கம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை தட்டி எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்து தெரியவந்தது.
இதையடுத்து இதுகுறித்த விசாரணை நடத்திய போலீசார் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுதியதாக வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகாததால், நேற்று அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் காவல்துறைக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.