சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஐந்து நாள் பரோலில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியே வந்தார்.
உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது கணவர் நடராஜனைப் பார்க்கவேண்டும் என்று 15 நாள் பரோல் கேட்டிருந்தார் சசிகலா. சென்னை மருத்துவமனை ஒன்றில் உள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல் முறை தாக்கல் செய்த மனுவில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் ஒருவரின் சான்றொப்பத்துடன் கூடிய நடராஜனின் மருத்துவ சான்றிதழ் இல்லை என்று கூறி பரோல் மனுவை நிராகரித்த அதிகாரிகள், சசிகலா வழக்குரைஞர்களிடம் உரிய தகவல்களுடன் புதிதாக விண்ணப்பிக்கும்படி அறிவுரை கூறினர்.
இதையடுத்து புதிய பரோல் மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை அவருக்கு சிறை அதிகாரிகள் ஐந்து நாள் பரோல் (விடுப்பு) அனுமதித்தனர். சென்னையில் அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள சென்னை போலீசார், அவர் சென்னையில் தங்கியிருக்கும்போது அரசியல் கூட்டம் எதிலும் பங்கேற்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே சிறைக்கு வெளியே காத்திருந்த டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு அதிமுகவினர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றிய நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சசிகலாவுக்கு அத் தீர்ப்பில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவுடன் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரியில் அடைக்கப்பட்டார்.