யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உணவு விடுதி ஒன்றின் உரிமையாளரான குறித்த முன்னாள் போராளியின் உணவு விடுதிக்குள் சாவகச்சேரி பொலிஸார் அத்துமீறி உள் நுளைந்து அட்டூளியம் புரிந்தமையை எதிர்த்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார், கடந்த செவ்வாய்க்கிழமை சிவில் உடையில் சென்று குறித்த உணவு விடுதியில் மதுபானம் கேட்டுள்ளனர். ஆனாலும், அங்கிருந்த 70 வயதான ஊழியர் ஒருவர் அந்த நாளன்று மதுபானம் விற்பனை செய்வதில்லை என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனால் மதுபானம் வேண்டுமெனெக் கூறியவாறே குறித்த முதியவரைப் பொலிஸார் சரமாரியாகத்தாக்கியதோடு மட்டுமன்றி பொலிஸாரிடம் எதிர்த்துப் பேசியதற்காக அவரை கைதுசெய்து அடைத்துள்ளனர். அதுமட்டுமன்றி அங்கே களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன், குறித்த உணவு விடுதியின் உரிமையாளர் முதியவரைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளார். மேலும் பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான குறித்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸாருக்கும் எதிராக விடுதி உரிமையாளரான முன்னாள் போராளி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
ஆனாலும் குறித்த முறைப்பாட்டினை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு சாவகச்சேரி பொலிஸார் கோரி வருவதாக தெரிவித்த அவர், தான் ஒரு முன்னாள் போராளி என்பதனை காரணம் காட்டியே இவ்வாறு அச்சுறுத்தப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இரு தடவைகள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் கூறியுள்ளார்.