வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தபோதிலும் சில விசமிகள் தவறான கருத்தை சமூகத்தில் பரப்பி வருவதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி தெ. கங்காதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் பங்கேற்புடன் மாணவர்கள் இணைந்து மிகச்சிறப்பான முறையில் நேற்றைய தினம் ஆசிரியர் தினத்தினை கொண்டாடியிருந்தனர்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை குழப்பாத வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. நினைவுப்பரிசில்களும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையில் மதிய உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விழா கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பாடசாலைக்கும் அங்கு கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிலர் விசமத்தனமான கருத்தை சமூகத்தில் பரப்பி வருகின்றனர்.
பாடசாலை நிர்வாகத்தில் தலையீடுகளை செய்ய முற்படும் சிலர் தமக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காமையினாலேயே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பாடசாலை சமூகம் வன்மையாக கண்டிப்பதுடன் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வரும் பாடசாலையினை சீர்குழைக்க முற்படுபவர்கள் தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் பின்னிற்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பழைய மாணவர்கள் சிலர் ஆசிரியர் தினம் சிறப்பாக இடம்பெறவில்லை என கருத்துக்கள் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.