மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 27 வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்பராணி என்ற பெண்ணே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இன்று காலை குறித்த பெண்ணின் 5 வயதுடைய பெண் குழந்தையின் பலத்த அழுகுரலைக் கேட்ட வீதியில் சென்றவர்கள் வீட்டின் உள்ளே சென்று அவதானித்த வேளையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுமக்கள் சேர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு இது குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவரும், பெண்ணின் தாயாரும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் குறித்த பெண்ணும் அவரது தந்தையும், அவரின் 5 வயதுடைய குழந்தையுடன் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.