புகைப்படம் எடுக்க முடியவில்லை, கதறும் காஞ்சி தாதா மகள்!

தனது தந்தை உடலைக் கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகள் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர்  தனபால். இவர்மீது கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர், இருதினங்களுக்கு முன்னர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மகள், ‘தனது அப்பாவின் உடலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனது அப்பா, மாரடைப்பு காரணமாக கம்போடியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். நானும், வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், விஷ்ணு மூவரும் சேர்ந்து போய் எனது தந்தையின் உடலை உறுதிசெய்தோம். அங்குள்ள புத்தர் கோயில் உள்ள இடத்தில் அவரது உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலைக் கொண்டுவந்து தருவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நமது தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடலை மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் அனுமதி அளிக்காததால், அவரது உடலைக் புகைப்படம் எடுக்க முடியவில்லை. எங்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.