கனடா நாட்டில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய ஓட்டுனரை தடுக்க முயன்ற ஊழியர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Thorsby என்ற நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெடுஞ்சாலை 39-ல் Fas Gas என்ற எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது.
இந்த நிலையத்திற்கு நேற்று மாலை 4 மணியளவில் பெட்ரோல் நிரப்ப வாகனம் ஒன்று வந்துள்ளது.
வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதும் பணம் கொடுக்காமல் ஓட்டுனர் வாகனத்தை இயக்கி தப்ப முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட ஊழியர் விரைவாக சென்று காரின் மீது தாவி ஏறியுள்ளார்.
ஆனால், காரை தாறுமாறாக ஓட்டிய நபர் அருகில் இருந்த சுவர் மீது மோதி ஊழியரை கீழே தள்ளியுள்ளார்.
இந்த நிகழ்வில் உடல் நசுங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
எரிவாயு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து பொலிசார் வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கல்கேரி நகரில் இதே போன்று பணம் கொடுக்காமல் ஓட்டுனர் தப்ப முயன்றுள்ளார்.
அப்போது, காரை தடுத்து நிறுத்த முயன்ற ஊழியர் கார் மோதி பலியாகியுள்ளார். இக்குற்றத்தில் ஈடுப்பட்ட ஓட்டுனருக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.