பிரபாகரனின் தலையில் துப்பாக்கி ரவை தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார். – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.. இராணுவம் நினைத்திருந்தால் சூசையின் மனைவியை வெட்டி வீசியிருக்க முடியும்.. 

Prabakaran-Leaders

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே கிடைத்தாக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் முன்னாள் கட்டளையதிகாரியும், 53 ஆவது படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது முதலில் தொலைபேசியில் அறிவித்ததாகவும், பின்னர் களநிலைமை அறிக்கையை எழுத்து மூலமாக அறியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளின் கழுத்தில் சயனைட் பட்டியை அணிவித்த பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலையில் துப்பாக்கி ரவை தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவருடன் இருந்த சிலர் சயனைட் உட்கொண்டு உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை கைப்பற்றி இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையக கட்டுப்பாட்டிற்குள் எவ்விதமான சித்திரவதை முகாம்களும் இருக்கவில்லை என கூறும் அவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு பின்னர், வன்னி கட்டளை தளபதியாக தானே செயற்பட்டதாகவும் சித்திரவதை முகாம்கள் காணப்பட்டிருந்தால் அது தனக்கு தெரிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை இராணுவம் கொலை செய்தது என்று கூறினால் சூசையின் மனைவி எப்படி உயிருடன் இருந்திருப்பார்? என முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வார இறுதிப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,..

இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை இராணுவம் கொலை செய்தது என்று கூறுவது முற்றிலும் பொய்.

அது உண்மையென்றால் சூசையின் மனைவி எப்படி உயிருடன் இருந்திருப்பார்?

இராணுவம் நினைத்திருந்தால் சூசையின் மனைவியை வெட்டி கடலில் வீசியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதற்கு பின்னர் இதுவரை ஒரு பயங்கரவாத செயற்பாடுகளும் நாட்டில் இல்லை.

தமிழ் மக்களின் பிள்ளைகள் கைகளில் ஆயுதங்களை ஏந்துவதற்கு, தமிழ் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே காரணமாவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாதம் என்று வரும் போது தமிழ், சிங்களம் என்ற பேதம் இல்லை. அனைவரும் உயிரிழப்பார்கள்.

அத்துடன் விடுதலைப் புலிகளும் தமக்கு எதிராக செயற்பட்ட பல தமிழ் இளைஞர், யுவதிகளை படுகொலை செய்தார்கள்.

மேலும், இறுதி யுத்தத்தின் போது 6000 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். மேலும் 6000 பேரை நாம் கைது செய்திருந்தோம்.

அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.