”ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற சிங்களச் சொல், எக்சத் ராஜ்ய என்று புதிய அரசியலமைப்பில் மாற்றப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’  என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’  என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

wigneswaran2_1654671g

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர்,

”ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற சிங்களச் சொல், எக்சத் ராஜ்ய என்று புதிய அரசியலமைப்பில் மாற்றப்பட வேண்டும்.

சிறிலங்கா ஒருபோதும் ஒற்றையாட்சி நாடாக இருந்ததில்லை.

தனித்தனியாக வாழ்ந்த பல மக்கள் குழுமங்கள் பிரித்தானியர்களால் ஒன்றாக கொண்டு வரப்பட்டனர். பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டது.

எனவே, அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பை உருவாக்கும் போது, இந்த நாட்டில் வித்தியாசமான அலகுகள் பிரித்தானியர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் தான், ஐக்கியம் அல்லது எக்சத்  (United) என்ற சொல்லை நாம் பயன்படுத்த வேண்டும்.

இத்தகைய மாற்றம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கும்.

ஐக்கிய (எக்சத்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டால், சிங்களத் தலைவர்களின் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.