கப்டன் ஜோன்சன் எனப்படும் ஓட்டமாவடி ஜூனைதீனிலிருந்து லெப்டினண்ட் கேணல் குன்றத்தேவன் எனப்படும் முகைதீன் வரை!
இலங்கைத் தீவில் ஈழ விடுதலைப் போராட்டக் காலக்கோட்டில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது தற்பொழுது அவ்வளவு நன்றாக இல்லை என்றே சொல்லமுடியும். ஒருவருக்கொருவர் செய்த தவறுகளை இரு தரப்பும் சீர்தூக்கிப் பார்ப்பதையே இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முக்கியமான உதாரணம் தான் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைவதை எதிர்க்கும் முஸ்லிம் எதிர்ப்புவாதப் போக்கு. உண்மையில் வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைந்ததே தமிழ்தேசிய எல்லைப்பரப்பு என்பதை இன்றிருக்கும் சந்ததியினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுய நலம் கொண்ட அரசியற்தலைமைகள் அதனை திட்டமிட்டு அடுத்த சந்ததி அறித்துகொள்ளாவண்ணம் இருட்டடிப்புச் செய்தனர். இருட்டடிப்புச் செய்யப்பட்ட இன்றைய இளம் சந்ததி அதனை அறிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை.
இணைந்த வடக்கும் கிழக்கும் தனியே தமிழ் மக்களுக்கானதுமட்டுமல்ல, அதில் முஸ்லிம் மக்களது வாழ்வுரிமையும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே தமிழ் தேசியத்தின் தார்மீக பட்டயம். இதில் இரு தரப்பும் ஒரே சிந்தனை கொண்ட எண்ணவோட்டத்தில் இருந்த காலத்தை இன்றைய சந்ததி புரிந்துகொள்ளவேண்டும்.
அதற்கு உதாரணம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தோளோடு தோள் நின்று களமாடிய முஸ்லிம் போராளிகளது தடயங்கள். விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் ஏராளமான முஸ்லிம் மாவீரர்களும் வீரவேங்கை, லெப்டினண்ட், லெப்டினண்ட் கேணல், கப்டன் எனும் போரியல் தரங்களின் அடிப்படையில் இருக்கின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
உண்மையைச் சொல்லப்போனால், “முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகளுடனா?” என்ற கேள்விகள் இன்றைய தலைமுறையினரிடையே எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதுதான் உண்மை.
ஈழ விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெற்றிருந்த வேளையில், அன்றிருந்த பல இயக்கங்களின் மத்தியிலும் முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு விடுதலைப்புலிகளுடந்தான் இணைந்திருந்தது. இன்றுள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இந்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை என்பது வேறுகதை.
சிலரது தனிப்பட்ட அரசியல் விரோதங்களும் குரோதங்களும் இருதரப்பு ஒற்றுமையை சிதைத்ததோடு மட்டுமன்றி பிற்காலங்களில் முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் போனது.
விடுதலைப் புலிகளது ஆரம்பகால கொரில்லா தாக்குதல்களின்போது கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்களது பங்கு அளப்பரியது. புலிகள் மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக மாறுவதற்கு முன்னரான காலத்தில் தனியே இலங்கை இராணுவத்தோடு மட்டும் போராடவில்லை. இந்திய இராணுவம் உள்ளிட்ட பரந்துபட்ட எதிரிகளைச் சமாளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் புலிகளிடத்தில் இருந்தது.
புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் இளைஞர்களின் இணைவானது தனியே அரசின் கண்களை மட்டும் உறுத்தவில்லை. தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலைக் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கம் பௌத்த மேலாதிக்கவாதிகளிடம் மட்டும் இருந்ததுமில்லை.
எண்பதுகளுக்கு பின்னரான காலத்தில் புலிகள் தனித்துவமிக்க இயக்கமாக வளர்ந்துகொண்டு செல்லவே எதிர்பார்க்கப்பட்ட பலவும் அரங்கேறின. தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைந்து முஸ்லிம் இளைஞர்களது போராட்ட வகிபங்கு வீழ்ச்சியுற்றது. யாரெல்லாம் எதை நினைத்து என்னென்ன திருகுதாளங்கள் செய்தார்களோ அது நிகழ்ந்து முடிந்தது.
முஸ்லிம் விடுதலைப் புலிப் போராளிகளுள் முதல் முஸ்லிம் மாவீரனாகிய கப்டன் ஜோன்சன் எனப்படும் ஓட்டமாவடி ஜூனைதீன் முக்கியமானவர். “தமிழீழ விடுதலை நாகங்கள்” என்ற பெயரில் ஆயுதக் குழு ஒன்றை ஆரம்பித்து கிழக்கு மாகாணத்திலே அரச படைகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் தமிழீழ விடுதலை நாகங்கள் (நாகப்படை) தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை முற்றுமுழுதாக இணைத்துக்கொண்டது. ஓட்டமாவடி ஜூனைதீன் தலைவர் பிரபாகரனின் மனங்கவர்ந்த போராளியானார். தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்புவதில் இதயபூர்வமாக போராடிய மாவீரர் அவர்.
இன்றைய வடகிழக்கு மாகாண இணைப்பை எதிர்ப்பவர்கள் மாவீரன் ஜூனைதீனின் தலைமையிலான விடுதலை இயக்கத்தை நினைவுகூர்ந்தாலோ அல்லது இறுதிப் போர் நடந்தவேளையில் ஆனந்தபுரம் யுத்த களத்தில் பலியான லெப்டினன் கேணல் குன்றத்தேவன் எனப்படும் முகைதீன் போன்ற இறுதிவரை நின்று களமாடிய மாவீரர்களை நினைந்தாலோ, உண்மையில் தாம் எதனை எதிர்க்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.