எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரும் பூகம்பமும் இருமடங்கு சுனாமியும் ஏற்படும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக நாட்டு மக்களை எச்சரிக்கும்விதமாக அந்த அமைப்பின் இயக்குனர் பாபு கலாயில் என்பவர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதம் கடைசிப் பகுதிக்குள் ஆசியாவையே உலுக்கும் மிகப்பெரிய பூகம்பமும் அதனாலான இரட்டிப்பு மடங்கு சுனாமியும் ஏற்படும் என்றும் இதனால் இந்தியா இலங்கை உள்ளிட்ட பதினொரு நாடுகள் பேரழிவினைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கையானது கடந்த வாரமளவில் சமூக வலைத்தளங்களெங்கும் வேகமாக பரவி மக்களைக் கிலி கொள்ள வைத்தது. இது தொடர்பாக குறித்த ஆய்வு மையத்தினரை சில அறிஞர்கள் விமர்சிக்கவும் செய்தனர்.
இதுபோன்ற சுனாமிகள் வருமாயின் அவற்றினை முற்கூட்டியே எச்சரிப்பதற்கு இந்தியாவில் புவியியல் ஆய்வு மையம் இருக்கின்றதென்றும் அதேபோல தமிழ் நாட்டில் அனர்த்த முகாமைத்துவ மையம் இருக்கின்றதென்றும் கூறியுள்ளனர்.
ஆனால் இவையொன்றும் இந்த எச்சரிக்கை குறித்து எதுவுமே கூறாதபடியால் மக்கள் பயம்கொள்ளத்தேவையில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
ஆனால் குறித்த ஆய்வு மையத்தின் இயக்குனர், ஏற்கனவே கடந்த 2004 ஆம் ஆண்டு வந்த சுனாமி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்னர் தான் எச்சரித்திருந்ததாகவும் அது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது அனைவரும் அப்போது தன்னைக் கேலி செய்ததாகவும் அதுபோலவே இப்பொழுதும் ஒரு சூழ்நிலையை தான் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அவர் தனது கருத்தில் மிகத் தெளிவான முடிவோடு இருக்கின்றார். கண்டிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சுனாமி வந்தே ஆகும் என்பதில் சற்றும் பின்வாங்காதளவுக்கு கருத்துக்கள் கூறிவருகிறார்.
எது உண்மை எது பொய் என்பதற்கும் அப்பால் நமது மக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். இதுவரை வந்த சுனாமிகள் பலரைக் காவுகொண்டமைக்கு இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை கேலி செய்வதும் காரணங்களாக பதிந்திருக்கின்றன. பொறுப்பு வாய்ந்த எந்தவொரு எச்சரிக்கை மையங்களும் சரியான முன்னெச்சரிக்கைகளைக் கொடுக்காமல்தான் இதுவரை பல இயற்கைப் பேரிடர்கள் மக்களை பலியெடுத்டிருக்கின்றன.
குறித்த ஆய்வு வதந்தியாகவே இருக்கட்டும், ஆனால் அதில் சொல்லப்பட்ட விடயம் சாதாரணமாகக் கடந்துசெல்லக்கூடியதுமன்று. புவியீர்ப்புவிசை மாற்றங்களால் பூமியின் உள்ளமைந்த தட்டுக்கள் புதிதுபுதிதாகத் தோற்றம்பெற்றுவருகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
ஆகையால் உண்மை பொய் என்பதையும் தாண்டி மக்கள் உரிய விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் சாலச் சிறந்தது என்றுதான் சொல்லமுடியும்!