யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில காலங்களாக அதிகரித்துவரும் சிசு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் பொதுமக்களிடையே வைத்தியசாலையின் மீதான நம்பிக்கையை குறைத்து எல்லோர் மனங்களிலும் பயத்தை விதித்துள்ளது.
இவ்வாறான மோசமான சூழ்நிலைகளுக்கு வைத்திய நிபுணர்களின் அசமந்தப்போக்கு, பணம் சம்பாதிக்கும் உத்வேகம் மற்றும் வைத்தியசாலை உள்நிர்வாக குளறுபடிகள், நிர்வாக திறன் அற்ற தலைமை போன்றவை காரணம் ஆகின்றன
இலங்கையின் முதல்தர சிறப்பு வைத்திய வசதிகள் ,பிரசித்திபெற்ற வைத்தியநிபுணர்கள் கொண்டியங்கும் வைத்தியசாலைகளின் பட்டியலில் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை முக்கிய இடத்தை பிடிக்கின்றது
யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் காணப்படும் வைத்திய வசதிகள் ,அதிநவீன தொழில்நுட்பஉபகாரணங்கள் என்பவற்றில் 25 வீதமான வசதிகள் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள் எதிலும் இல்லை.
இந் நிலையில் அரச வைத்தியசாலையில் பணிபுரியும் அதே வைத்திய நிபுணர்களால் 100 வீத பாதுகாப்பான சிறந்த மருத்துவ சேவையை தனியார் வைத்திய சாலைகளில் மட்டும் வழங்கக்கூடியதாக இருப்பதன் பின்னணி என்ன என ஆராயும் போது,
யாழ் போதனா வைத்தியசாலையின் மீது அவநம்பிக்கையையும் பயத்தையும் உருவாக்கி பொதுமக்களை தனியார் வைத்தியசாலைகளில் பக்கம் ஈர்ப்பதற்காக வியாபார தந்திரம் என்பது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறான சூழ்நிலைகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கண்டுகொள்ளப்படாமல் விடுவது தனியார் வைத்தியசாலைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான வியாபார ஒப்பந்தமேயாகும்.
அரச விசேட வைத்திய நிபுணர்கள் ஒன்றுக்கு மேற்படட தனியார் வைத்திய நிலையங்களில் மிகவும் சிரத்தையுடன் பணத்திற்காக உழைப்பதோடு சிலர் தமக்கென சொந்த வைத்திய மையங்களை வைத்திருக்கின்றனர்
அரச வைத்திய சாலையில் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாட்டுகளில் அனுமதிக்க படுகின்ற நோயாளர்களை தமது வாடிக்கையாளர்கள் ஆக்குவதற்காகவே இவ் அரச வேலையில் (சேவையில்) ஈடுபடுகின்றனர்.
அத்துடன் கடமை நேரங்களில் தனியார் வைத்திய சாலைகளில் சட்ட்திற்கு புறம்பாக கடமையாற்றுவதனால் குறித்த அவசர நேரங்களில் நோயாளிகளிற்கு வினைத்திறனான சிகிச்சை வழங்க முடியாது போகின்றது.
இது தவிர யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணரை பொதுமக்கள் அண்டவிடாது நூதனமாக தவிர்ப்பதற்கு சிற்றூழியர்களை பயன்படுத்துகின்றனர்.
சிற்றூழியர்கள் வன்சொல்லையும் கடுமையான கேவலமான பேச்சுக்களையும் தமது ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இவர்களின் அவமரியாதையாக பேச்சுக்களையும் கடுமையான நடவடிக்கைகளையும் பார்த்து சலித்து மக்கள் அரச வைத்திய சாலையின் பக்கம் நாடுவதை குறைகின்றனர் .
வைத்தியர்கள் ,நிர்வாகத்தினரின் பண பேராசையை குறைத்து மனிதாபிமான முறையில் நடந்தால் அன்றி இவ்வாறான பேரவலத்தின் இருந்து யாழ் மக்களை காப்பாற்ற இயலாது.