இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள கிராமங்களான, குனான், மற்றும் போஷ்போராவில் 26 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்கு முன்னர், இந்தியப் படையினர் 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய பெண்கள் இன்னும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
1991 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் குனான்.
அந்த கிராமம் கடுமையான குளிருக்கு பிறகு உறங்கச் சென்ற நேரம்.
ஸூனி மற்றும் சரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தூங்க செல்லும் நேரத்தில்தான் அவர்களின் வீட்டு கதவு சத்தமாக தட்டப்பட்டது.
அந்த காலகட்டத்தில் இந்தியா , தனது ஆட்சிக்கு எதிராக காஷ்மீரில் எழுந்த மக்கள் ஆதரவு பெற்ற ஆயுதக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருந்தது.
அதிரடி நடவடிக்கைகள் என்று உள்ளூரில் அறியப்பட்ட “சுற்றி வளைத்துத் தேடுதல்” நடவடிக்கைகள் இயல்பானதாக மாறத் தொடங்கியிருந்தன.
இப்போதும் அவை அப்படித்தான் தொடர்கின்றன.
- காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான பிரத்யேக சுடுகாடு
- காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா
1990களில், ஒரு இடத்தை தனிமைப்படுத்தும் ராணுவத்தினர், அங்குள்ள ஆண்கள் எல்லோரையும் வீட்டைவிட்டு வெளியே வர வைப்பார்கள், பின்பு வீடுகளில் சோதனையிடுவார்கள்.
வெளியே வந்த ஆண்களை வரிசையில் நிற்க வைத்து, தகவல் தெரிவித்த நபரைக்கொண்டு கிளர்ச்சியாளர்களை கண்டறிந்து அழைத்து செல்வது வழக்கம்.
அன்றைய இரவு, ஸீனி மற்று சரீனா அவர்கள் வீட்டு வாசலில் வீரர்களை பார்த்ததும், அதை `கிராக்டவுன்` நடவடிக்கை என்றே நினைத்தனர்.
வழக்கம் போல, ஆண்கள் வெளியே இழுத்து செல்லப்பட்டனர், ராணுவத்தினர் உள்ளே சென்றனர்.
ஆனால், அன்றைய நாளை நினைத்து பார்க்கும் போது, அவர்கள் கண்கள் இன்னும் கூட நீரால் மூழ்குகின்றன.
வீசப்பட்ட குழந்தை
“நாங்கள் தூங்குவதற்காக தயாராகிய போது, வீரர்கள் வந்தனர். ஆண்களை எல்லாம் அழைத்து சென்றவர்கள், பின்பு மது அருந்த துவங்கினர். அவர்கள் என்னை பிடித்து இழுக்க முயலும் போது என்பது இரண்டு வயது குழந்தையை நான் கைகளில் வைத்திருந்தேன்.
நான் தடுக்க முயன்றேன். இந்த கைகலப்பில் என் மகள் கைகளை விட்டு நழுவி, ஜன்னலுக்கு வெளியே விழுந்தாள். அவள் வாழ்க்கை முழுவதும் முடமானாள்.
பின்பு மூன்று வீரர்கள் என்னை இழுத்து, என் ஆடைகளை கிழித்தனர். அதற்கு பிறகு என்ன நடந்தது என எனக்கு நினைவில்லை. அங்கு ஐந்து ஆண்கள் இருந்தனர். அவர்களின் முகம் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது”. என்கிறார் ஸூனி.
ஸரீனாவும் அதே வீட்டில் இருந்தாள். அவளுக்கு திருமணம் ஆகி 11 நாட்கள் ஆகியிருந்தது.
“நான் அன்று தான் என்னுடைய பெற்றோர் இல்லத்தில் இருந்து வந்திருந்தேன்.
சில வீரர்கள், என் மாமியாரிடம் வீட்டில் தொங்கவிடப்பட்டு இருந்த புதிய துணிகள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், இது எங்கள் வீட்டின் புதிய மருமகள் என கூறினார்.
அதற்கு பின்பு நடந்ததை என்னால் விவரிக்க கூட துவங்க முடியவில்லை. எங்களுக்கு நடந்தது தவறு மட்டுமல்ல, நாங்கள் எதிர்கொண்டது அநீதி. இன்று கூட,படையினரைப் பார்த்தால் எங்களுக்கு பயத்தில் நடுக்கம் வருகிறது” என்கிறார் ஸரீனா.
குனான் மற்றும் அருகாமையில் உள்ள போஷ்போரா கிராமத்தினர், இந்திய படையினர் தங்கள் மீது திட்டமிட்ட பெரிய அளவிலான பாலியல் வன்முறையை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சூழலில், ஆண்களை மிக கொடுமையாக சித்திரவதை செய்ததாகவும், இதற்கு நீதி கேட்டு கடந்த 26 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘உண்மையின் மீது படியும் தூசுகள்’
காஷ்மீர் மாநிலத்தின் அமைச்சரான நயீம் அக்தரிடம் ஸ்ரீநகரில் நான் பேசிய போது, இந்த குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டேன்.
அவர், காஷ்மீர் மாதிரியான மோதல்கள் நடக்கும் இடங்களில், பொதுவாக உண்மைகள் அதற்கு மேல் படிகின்ற தூசுகளால் மறைக்கப்படும் என்றார்.
தற்போது, ஒரு இளம் காஷ்மீர் பெண்கள் குழு, இந்த தூசியை துடைக்க முடிவு செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, அவர்கள் காஷ்மீர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இளம் ஆராய்ச்சியாளரான நட்டாஷா ரதரும், மனுவை தாக்கல் செய்தவர்களில் ஒருவர்.
நட்டாஷாவும், இந்த குழுவை சேர்ந்த மற்ற நான்கு பெண்களும் இணைந்து, இந்த வழக்கு தொடர்பாக, `டூ யூ ரிமம்பர் குணான் போஷ்போரா? (do you remember kunan pushpora?) என்ற விருது பெற்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர்.
“இது பெரிய பாலியல் வன்புணர்வு வழக்கு. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து இதுபற்றி கூறி, தங்களின் மன தைரியத்தை வெளிக் காண்பித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதனால்தான் நாங்கள் இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என எண்ணினோம்” என்கிறார் நட்டாஷா ரத்தர்.
கல்விக்காக ஏங்கும் காஷ்மீர் சிறுவன்
அது மீண்டும் திறக்கப்பட்டது. நீண்ட, கடினமான போராட்டத்திற்கு பிறகு, காஷ்மீர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு, மாநில அரசிற்கு உத்தரவிட்டது.
முதலில் இதை ஒப்புக்கொண்ட அரசு, பின்பு மனதை மாற்றிக்கொண்டு, உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மறுக்கும் இந்திய ராணுவம்
இந்த வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது.
இந்திய ராணுவம், இந்த குற்றச்சாட்டுகளை எப்போதுமே மறுத்துள்ளது.
நாங்கள் நேர்காணலுக்காக வேண்டுகோள் வைத்தபோது, அவர்கள் எங்களுக்கு அறிக்கையை அனுப்பி வைத்தனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று முறை சுதந்திரமான விசாரணை நடைபெற்றது என்றும், முரணான பதில்கள் கிடைத்ததால், வழக்கு மூடப்பட்டது என்றும் கூறினார்.
காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் பேசுவதைப் பார்த்தால், அவை மிகவும் கவனமான நீதிக்கதைகள் போலத் தோன்றும்.
ஆனால் எல்லோருமல்ல.
நாம் அம்மாநில பெண்கள் உரிமை ஆணையத்தில் தலைவரான நயீமா அஹமது மஹ்ஜூரிடம் பேசினோம்.
அவர், குனான் மற்றும் போஷ்போரா மக்களுக்கு எதிராக இந்த குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை தான் நம்புவதாகவும், இது நீதிமன்றத்தில் நிச்சயம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று மிக தெளிவாக தெரிவித்தார்.
இருந்த போதும், மாநில அரசால் இந்த சட்டரீதியான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
குனான் மற்றும் போஷ்போராவில், அந்த கொடுமையான பனி இரவில் என்ன நடந்தது என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாமலேயும் போகலாம்.
புதிய தலைமுறையினர் தற்போது இங்கு வயது வந்தவர்களாகி வருகின்றனர்.
இந்த கிராமங்களும், அதன் வீடுகளும் மாறுகின்றன.
இருந்த போதும், சில வலிகளை தரக்கூடிய நினைவுகள், இங்கு வசிப்பவர்களை தொடர்ந்து பயமுறுத்தத்தான் செய்கின்றன.