கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் தமிழர் என்று சர்வதேச ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டவர் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா.அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்தியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அது பரபரப்பான செய்தியாகவும் அமைந்திருந்தது. ஆனால், அவரது தாய் மொழி சிங்களம் என்பது பலருக்குத் தெரியாத விடயம்.
எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தமிழருக்கு கடற்படைத் தளபதி பதவி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, குறுகிய காலம் பதவியில் இருந்த கடற்படைத் தளபதி என்ற பெயரையும் அவரே பெற்று விடுவாரோ என்ற பரபரப்பு பலரிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால், வைஸ் அட்மிரல் சின்னையா வரும் 26ஆம் திகதிக்குப் பின்னரும் கடற்படைத் தளபதியாக நீடிப்பாரா என்ற சந்தேகம் தான் அதற்குக் காரணம்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு செப்டெம்பர் 26ஆம் திகதியுடன், 55 வயது நிறைவடைந்து விட்டது.
முப்படைகளிலும் இருப்பவர்கள் 55 வயது வரையே பணியில் இருக்க முடியும். அதற்குப் பின்னர், சேவையில் இருக்க வேண்டுமானால், ஜனாதிபதியின் சேவை நீடிப்பு அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே, வைஸ் அட்மிரல் சின்னையா சேவை நீடிப்புக்காக ஜனாதிபதியிடம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார்.
55 வயதைக் கடந்த படை அதிகாரிகள், தளபதிகளுக்கு 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் என்று தேவையைப் பொறுத்து சேவை நீடிப்பை வழங்க முடியும். சிலவேளைகளில் இரண்டு ஆண்டுகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்ட வரலாறும் இருக்கிறது.
அப்படியான நிலையில், கடற்படைத் தளபதி ஒருவருக்கு. அதுவும் நியமனம் பெற்று ஒரு மாதத்தின் பின்னர், வெறும் ஒரே ஒரு மாத சேவை நீடிப்பை மாத்திரம் ஜனாதிபதி வழங்கியிருப்பது தான் ஆச்சரியம்.
பல தளபதிகளுக்கு, ஆறு மாத, ஒரு வருட சேவை நீடிப்புகளுக்குப் பின்னர், இரண்டாவது, சேவை நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது சேவை நீடிப்பைப் பெற்றவர்களும் உள்ளனர்.ஆனால், ஒரு மாத சேவை நீடிப்புப் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி உள்ளது.
அவரை நீண்டகாலம் பதவியில் வைத்திருக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், 6 மாதங்கள் அல்லது 1 வருட சேவை நீடிப்பை வழங்கியிருக்கலாம். குறுகிய சேவை நீடிப்பு வழங்கப்பட்டதானது, நீண்டகாலத்துக்கு பதவியில் வைத்திருக்கும் திட்டம் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு முடிவுக்கு இணங்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.
ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைளுக்கு தலைமை தாங்கிய, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், நன்கு அனுபவம் மிக்கவரான வைஸ் அட்மிரல் சின்னையா, கடற்படையை நவீனப்படுத்தும் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.
அவரைப் பயன்படுத்திக் கொள்ளாமல் குறுகிய காலத்திலேயே வீட்டுக்கு அனுப்பும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கிறதா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
இவருக்குக் கீழ் இருக்கும் மற்றொரு கடற்படை அதிகாரிக்கு வாய்ப்பளிப்பதற்காக, இவரை ஓய்வுபெற வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் ஒரு தகவல் ஊடகங்களில் பரவியிருந்தது.
அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 (Gephard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தான், வைஸ் அட்மிரல் சின்னையா பழிவாங்கப்படுகிறார் என்றும் ஒரு கதை பரவியுள்ளது.
கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், “24 பில்லியன் ரூபா செலவில் போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தான் கடற்படைத்தளபதியை ஓய்வுபெற வைக்க முயற்சிக்கப்படுகிறதா?” என்று அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அப்படியில்லை, என்று சமாளித்திருந்தார். அதேவேளை, ஒரு மாதத்தை விட அதிக சேவை நீடிப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், போர்க்கப்பல் கொள்வனவு விவகாரம் அரசியல் ரீதியாகவும் வலுப்பெற்று வருகிறது. துறைமுகத்தை விற்று போர்க் கப்பல் கொள்வனவு செய்ய வேண்டுமா? போர் இல்லாத நாட்டுக்கு எதற்காக போர்க்கப்பல் என்று மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற போது, 24 பில்லியன் ரூபாவுக்கு போர்க்கப்பலை வாங்க வேண்டிய தேவை இல்லை என்ற கருத்தில் நியாயம் உள்ளது.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும், கூட இதையே தான் செய்திருந்தது. அதனால் தான் போருக்குப் பின்னரும், பாதுகாப்புச் செலவு சற்றும் குறையாமல் எகிறிச் சென்று கொண்டிருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலை கடன் திட்டத்தின் கீழ் தான் வாங்குகிறோம் என்று அரசாங்கம் நியாயப்படுத்தக் கூடும். ஆனாலும், இந்த கடனுதவி சும்மா வழங்கப்படவில்லை.
2010ஆம் ஆண்டு இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடனுதவித் திட்டத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. அதில், 165 மில்லியன் டொலர் மாத்திரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், காலாவதியாகி இருந்தது.
காலாவதியாகிப் போன கடன் திட்டத்தைப் புதுப்பித்தே, ரஷ்யா இந்தப் போர்க்கப்பலை இலங்கைக் கடற்படையின் தலையில் கட்டிவிடப் போகிறது.
மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் இருந்தே, இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது ரஷ்ய ஊடகங்களில் வெளியாகின. ஆனால் கடற்படையோ அதனை நிராகரித்து வந்தது.
ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 கப்பலைக் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த பின்னரும் கூட, அத்தகைய முடிவு எடுக்கப்படவில்லை என்று தான் கடற்படை கூறி வந்தது.
எனினும், கடந்த மாதம் 26ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 போர்க்கப்பலை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது.
இதற்காக ரஷ்யாவின் கடன் திட்டத்திலிருந்து, 135 மில்லியன் டொலர் (சுமார் 20 பில்லியன் ரூபா) பெறப்படும். மிகுதி 15 வீதம் இலங்கை அரசின் பங்களிப்பாக இருக்கும்.
ஆயுதங்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் கப்பலின் மொத்தப் பெறுமதி, 158.5 மில்லியன் டொலராகும். 24 பில்லியன் ரூபாஇதைவிட கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு 7 மில்லியன் டொலரை (கிட்டத்தட்ட 1 பில்லியன் ரூபா) அரசாங்கம் வழங்க வேண்டும்.
ரஷ்யா வழங்கும் கடனை 4 வீத வட்டியுடன் 10 ஆண்டுகளில் இரண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இது தொடர்பான உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும்.
இந்தப் போர்க்கப்பல் தரை, வான் மற்றும் கடலுக்கடியிலான இலக்குகளைத் தாக்கும், பாதுகாப்பு, ரோந்து மற்றும் ஈரூடகத் தாக்குதலுக்கான சூட்டாதரவு, கண்ணிவெடிகளை விதைத்தல், கடல் எல்லைகள், பொருளாதார வலயங்களை பாதுகாத்தல், கடற்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடல் வளத்தைப் பாதுகாத்தல், நிர்க்கதியான கப்பல்களை மீட்டல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
இதன் மூலம் தனியாகவோ, கடல் நடவடிக்கை படையாகவோ பரந்துபட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.AK-176M எனப்படும், 76.2 மி.மீ ஆட்டிலறிகள், AK-630M எனப்படும் ஆறு குழல்களைக் கொண்ட 30 மி.மீ பீரங்கி, 14.5 மி.மீ கடற்படை இயந்திரத் துப்பாக்கிகள் இரண்டு என்பன இதன் பிரதான ஆயுதங்களாகும்.
போர் இல்லாத போதிலும் கூட, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்தும் அமெரிக்காவிடம் இருந்தும் கப்பல்களை வாங்கி கடற்படையைப் பலப்படுத்தி வருகிறது அரசாங்கம்.
இதுவரையில் அரசாங்கம் கொள்வனவு செய்த கப்பல்கள் எல்லாவற்றையும் விட ரஷ்யாவிடம் வாங்கவுள்ள ஜிபார்ட் 5.1 போர்க்கப்பல் தான் மிகவும் நவீனகரமானதும் சக்திவாய்ந்ததுமாகும்.
இலங்கையைப் போன்றதொரு நாட்டுக்கு இதுபோன்ற கப்பல்கள் தேவையா என்பது முக்கியமான கேள்வி. அதனால் தான் கடற்படைக்குள் கூட இந்தக் கொள்வனவு விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் இருந்திருக்கலாம்.
அத்தகைய மாற்றுக் கருத்துக்கள் தான், கடற்படைத் தளபதியையும் ஓய்வு நிலைக்குள் தள்ளும் நிலையை ஏற்படுத்துமாக இருந்தால்,அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சைகள் உருவாக இடமுண்டு.