தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாடுகள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது. இராணுவத்திடம் சரணடைவதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க முடியும். ஆனால் மூன்றாம் தரப்பின் பிரசன்னம் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக அப்போது அறிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் அமெரிக்கா அச்சுறுத்தும் வகையில், மூன்றாம் தரப்பிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சரணடைவதற்கு வாய்ப்பளிக்குமாறு வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அனைத்து சவால்களையும் எதிர்நோக்க தயாரான நிலையிலேயே இறுதிகட்ட போரை முன்னெடுத்திருந்தோம்.
சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வு பெற்று வாழ்கின்றனர். இவர்களில் ஒருவரைக் கூட நாங்கள் கொலை செய்யவில்லை.
உதாரணமாக விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தோம். அதேபோன்று தமிழ்ச்செல்வனின் மனைவியும் இன்று உயிருடனேயே இருக்கின்றார்.
அமெரிக்காவின் தேவை புலிகளின் தலைவரை மூன்றாம் தரப்பிடம் சரணடைய செய்வதேயாகும். எனினும், அதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.