சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பொறுப்பேற்றுள்ளார்.
பிரித்திகா யாசினி, காவல்துறை அதிகாரி தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை ஆவார். இவர் ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.
பின்னர் சான்றிதழ்களில் இருந்த பிரதீப் குமார் என்ற பெயரை பிரித்திகா யாஷினி என்று மாற்றிக் கொண்டார். முன்னதாக இவர் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார்.
ஆனால் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் கலந்து பிரித்திகா தேர்ச்சி பெற்றார்.
எழுத்துத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வில் 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டு தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து பிரித்திகா மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில் இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு மாநகர போலீஸ் ஆணையர் சுமித்சரண் கடமை நியமன ஆணையை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கினார்.
இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சி நிலையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
பின்னர் எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் கடமையாற்ற நியடனம் வழங்கப்பட்டு கடமையாற்றினார். தற்போது சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.