மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத்திலுள்ள 6 சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக சிறுவர் இல்ல அதிகாரியை கிளிநொச்சி நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
குறித்த சிறுவர் இல்ல அதிகாரியை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுவர் இல்ல மாணவர்கள் ஆறுபேர் களவாக இளநீர் வெட்டி அருந்தியதாலேயே குறித்த சிறுவர்கள் மீது சிறுவர் இல்ல அதிகாரி மோசமாகத் தாக்கியுள்ளார என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டது.
இதனை நிராகரித்துவரும் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்பாது சிறுவர்கள் காயமடைந்துள்ளதாவும் தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் ஒருவரின் தந்தையிடம் சிறுவர் இல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அனுமதியின்றி இளநீர் பருகியமைக்காக தம்மீது சிறுவர் இல்ல நிர்வாகம் தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தொர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு விரைந்த சிறுவர் நன்னடத்தை பிரிவினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் தாக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.