டெங்குவால் நிலைகுலைந்து கிடக்கிறது தமிழகம். போதாக்குறைக்கு, மலேரியா வேறு. இந்த நோய்களுக்குக் காரணம் கொசுக்கள். என்னதான் லிக்விட், காயில், லோஷன், கொசு பேட் என்று கொசுக்களை விரட்ட பல ஆயுதங்கள் இருந்தாலும் வெள்ளமென பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கின்றன கொசுக்கள். இச்சூழலில் கொசுக்களை எளிதாக அழிக்கலாம் என்ற தலைப்பில் ஒரு செய்தி வாட்ஸ்ஆப்பில் சுற்றி வருகிறது.
‘கொசுவிரட்டியாகப் பயன்படுத்தும் லிக்விட் தீர்ந்தவுடன் அந்த பாட்டிலை குப்பையில் போடாமல், அதில் முக்கால் பாகத்துக்கு வேப்பெண்ணெய் ஊற்றி் ஐந்து துண்டு கற்பூரத்தை சேர்த்து நன்கு கலக்கிப் பயன்படுத்த வேண்டும். இது கொசுவை விரட்டப் பயன்படுத்தப்படும் கெமிக்கலைவிட நான்கு மடங்கு பலன் தரும். இதன்மூலம் 30 நிமிடங்களில் கொசுவை விரட்டலாம். மேலும், இந்த கலவையை நீராவியாகப் பயன்படுத்தலாம். இதனால், எந்தவித ஆரோக்கியக்கேடும் வராது’ என்பது தான் வைரலாகி வரும் வாட்ஸ்ஆப் செய்தி. பலர் இதைப் பரீட்சித்துப் பார்த்தும் வருகின்றனர்.
“உண்மையில், வேப்பெண்ணெய், கற்பூரக் கரைசலுக்கு கொசுவை விரட்டும் தன்மை உண்டா? உண்டெனில் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்”? என ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
“நீங்கள் குறிப்பிடும் வாட்ஸ்ஆப் செய்தியை நானும் பார்த்தேன். ஆயுர்வேத மருத்துவ முறைப்படி, வேப்பெண்ணெயும் கற்பூரமும் கொசுவை விரட்ட பரிந்துரைக்கப்படுவதுண்டு. ஆனால், இந்த வாட்ஸ்ஆப் தகவலில் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற தகவல் இல்லை. கண்டிப்பாக, கொசு விரட்டி லிக்விட் பாட்டிலில் ஊற்றி மின்சாரம் மூலம் பயன்படுத்தக்கூடாது. ஷாக் அடிக்கவும், தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.
வேப்பெண்ணெய் ஒரு சிறந்த கொசு விரட்டி. வேப்பெண்ணெயை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இது கொசுவிலிருந்தும் கொசுவால் உண்டாகும் நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கும். ஒரு டம்ளரில் வேப்பெண்ணெயை ஊற்றி அதில் நான்கைந்து கற்பூரத் துண்டுகளைப் போட்டு அறையின் மூலையில் வைத்தால் போதும். எண்ணெயின் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட வேறு சில வழிகளும் உள்ளன.
* கற்பூரவல்லி இலைச் சாற்றை சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி, வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு வராது.
* புகைப் போடுதல் மிகவும் பழமையான முறை. யூகலிப்டஸ் இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து புகை போடலாம். வேப்ப இலை, நொச்சி இலைகளை நெருப்புக் கங்குகளில் போட்டுப் புகை போடலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்துப் புகை போடலாம். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புகை போடுவதைத் தவிர்க்கவேண்டும்.
* வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி ஆகியவற்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் பச்சிலைத் தைலம் கிடைக்கும். இந்தப் பச்சிலைத் தைலத்தை கற்பூரத்துடன் சேர்த்து சாம்பிராணி புகையாகப் போடலாம்.
* தேங்காய் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்த்துக்கொள்ளலாம். கொசு அண்டாது.
* புதினாவுடன் சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். கிடைக்கும் சாற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம். வீட்டின் ஜன்னலோரத்தில் புதினா, கற்றாழை, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, செவ்வந்தி போன்ற செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்கு அருகில் வேப்ப மரம் வளர்ப்பதும் நல்லது. எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி ஜன்னல், கதவுகளின் மூலையில் வைக்கலாம். இவற்றிலிருந்து வரும் வாசனையும் கொசுவை விரட்டும்.
வாட்ஸ்ஆப் தகவலின் உண்மைத்தன்மை!
ஆரோக்கியம் குறித்து பல செய்திகள் நிமிடத்துக்கு ஒருமுறை நம் வாட்ஸ்ஆப்க்கு வந்தவண்ணம் உள்ளன. இவ்வாறு பரவும் மருத்துவக் குறிப்புகள், உடல்நலன் சார்ந்த செய்திகள், வீடியோ, ஆடியோக்களைக் கேட்டு அப்படியே பின்பற்றக்கூடாது. அவற்றின் உண்மைத் தன்மையை அதுசார்ந்த மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு சமூக வலைதளங்களில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில் எந்த ஒரு சிகிச்சையும் மருத்துவரின் அனுமதியின்றி கொடுக்கக் கூடாது.