ஜெர்மனிய தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த வருடம் பெற்றுக்கொண்ட புள்ளி விபரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கைக்கு அமைய ஜெர்மனியில் சுமார் 1000 விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் நபர்கள் உட்பட சுமார் 30000 பேர் ஜெர்மனியில் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் அடக்கம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெர்மனியில் சுமார் 29000 வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் ஜெர்மனிக்குள் செயற்பாட்டு ரீதியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அவர்களின் இலக்காக மாறியுள்ள நாடுகளுக்கு கெடுதியான பாதிப்பை ஏற்படுத்தும் என ஜெர்மனிய தேசிய புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்பு அல்ல எனவும், அது குறிப்பிட்ட நாட்டில் மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்பு எனவும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.