மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம்(09) இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து வயது பிள்ளையின் தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கட்டிலில் தூங்கியவாறே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டின் மோட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் ஒருவர் குறித்த வீட்டில் இருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களை தாக்கமுட்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இளைஞரை கைதுசெய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினை பெருமளவான இளைஞர்கள் சூழ்ந்திருந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும், சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றுள்ளனர்.