ஐதராபாத்தில் உள்ள நம்பாலி என்ற பகுதியில் ஹுமிரா பேகம் என்ற பெண் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவர் தனது 4 மாத குழந்தையான ஃபயஸ் கானுடன் கடந்த வாரம் புதன்கிழமை இரவு சாலை ஓரமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டனர். பேகம் அதிகாலை 4:30 மணியளவில் விழித்தபோது குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணியில் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் தலைமையிலான குழு ஈடுபட்டது. சிசிடிவி கேமராவில் உள்ள பதிவேட்டின் மூலம் கடத்தப்பட்ட குழந்தையை 15 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
குழந்தை மீட்டகப்பட்டதில் இருந்து அழுது கொண்டே இருந்தது. பின்னர், அக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகும் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் குழந்தையை தன் கையில் எடுத்து மெதுவாக தடவிக்கொடுத்தார். குழந்தை உடனே அழுகையை நிறுத்தி சிரிக்க தொடங்கியது.
இன்ஸ்பெக்டரும், குழந்தையும் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பது போன்ற படம் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.