தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பெரும்பாலானவர்கள் நல்ல தண்ணீரை சேமித்து வைத்தனர். இதன் காரணமாக டெங்கு பரவியது அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுப்பதில் நிலவேம்பு சாறும், பப்பாளி இலை சாறும் முதன்மை பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் நில வேம்பு சாறு வினியோகம் நடந்து வருகிறது. என்றாலும் டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்தது.
கடந்த சில தினங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 40-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
7 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீடு, வீடாக சென்று குடி தண்ணீர் தேக்கத் தொடர்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதுபோல கடைகளிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சரக்கு சேமிப்பு குடோன்கள், தியேட்டர்கள், வாகன பணி மனைகள், காலி மனைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வரும் இந்த கள ஆய்வு பணிகள் மற்றும் அதிரடி சோதனைகள் மூலம் பல இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ஏடிஎஸ் வகை கொசுப் புழுக்கள் உருவாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கொசுப் புழுக்கள் மருந்து அடித்து அழிக்கப்பட்டன.
இதற்கிடையே பல இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
வீடுகள், கடைகளில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், நீர் தேக்கத் தொட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள், பூந்தொட்டிகள், மீன் தொட்டிகள், ஆட்டுக்கல் மற்றும் உபயோகமற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி ஏடிஎஸ் வகை கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பதை கண்டனர்.
மேலும் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் வீசப்பட்ட பழைய டயர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சேமிக்கப்பட்ட இடங்களிலும் கொசு உற்பத்தி அபாயம் இருப்பது தெரிந்தது.
சென்னையில் ராயப்பேட்டை, புதுப்பேட்டை உள்பட பல பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
சுகாதாரத் துறையின் இந்த தீவிர சோதனை மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. சென்னையில் மட்டும் சுமார் 2,500 கடைக்காரர்கள் டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் வகையில் பழையப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதாரத் துறையின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “டெங்கு கொசு உற்பத்தியை செய்யும் வகையில் நீங்கள் விதிகளை மீறி உள்ளீர்கள். எனவே ஏன் உங்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் பிரிவு 134(1)ன்படி குற்ற வழக்கு தொடரக்கூடாது” என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 2 நாட்களுக்குள் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 134(1)ன்படி சட்டத்தின் பிரிவு 44, 84 ஆகியவையின் கீழ் 20 ஆயிரம் பேருக்கும் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1. கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும்.
2. தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.
3. வீணான பொருட்களான பிளாஸ்டிக் டப்பா, டயர், உடைந்த குடங்கள் போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் தங்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ல் பிரிவு 134(1)ன் கீழ் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் காவல்துறையின் மூலம் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 269-ன் கீழ் தண்டனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் எச்சரிக்கை நோட்டீசை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க தமிழகம் முழுவதும் போர்க் கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் டயர், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை அகற்றப்பட்டு வருகிறது. குடிநீரை சேமித்து வைக்கும் டிரம், தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் டேங்குகள் போன்றவற்றை முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
திறந்து வைப்பதன் மூலம் தான் டெங்கு கொசுக்கள் உருவாகியுள்ளன. கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்கள், காலி மனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து இவ்வகை கொசுக்கள் உருவாகின்றன.
தமிழகத்தில் 2 கோடி வீடுகள், லட்சக்கணக்கான நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாமல் தடுக்க உதவ வேண்டும்.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இடங்களை கண்டறிந்து அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன் வரவேண்டும்.
இதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர நேரடி நடவடிக்கையிலும் சுகாதாரத்துறை தீவிரமாகியுள்ளது. காய்ச்சல் பாதிப்பை குறைப்பதற்கு உலக ஏடிஸ் கொசுக்களை தடுத்தால் மட்டுமே முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர். அது ஒன்றுதான் தீர்வாக உள்ளது.
அதனால் கொசுக்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியம். நல்ல தண்ணீரில் உருவாகும் டெங்கு கொசுக்கள் காலிமனைகள், வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், டயர், பிளாஸ் டிக் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகின்றன.
பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் இது போன்ற வீடுகள், கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு முதல் கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்படும். அதனை 2 நாட்களுக்குள் சுத்தம் செய்யாவிட்டால் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் இதுவரையில் 20 ஆயிரம் கடைகள், வீடுகள், காலி மனைகளின் உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2,500 பேருக்கு இடங்களை சுத்தமாக வைத்து கொள்ள நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் இடங்களை சுத்தம் செய்யவில்லை என்றால் அபராதம் அல்லது 6 மாத தண்டனை வழங்க கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறதே தவிர தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே டெங்குவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.