பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றிபெறவுள்ளதென தீர்மானிக்கும் 5 ஆவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.
இரு அணிகளுக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.
முதலாவது போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என முன்னிலைபெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநாள் முடிவில், 198 ஓட்டங்களைப்பெற்று ஐந்து விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றிபெறுவதா, தோல்லியைத் தழுவுவதா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இன்றைய நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுமா என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 119 ஓட்டங்களைப்பெறவேண்டும்.
இலங்கை அணிவெற்றிபெற வேண்டுமாயின் 119 ஓட்டங்களுக்குள் மிகுதி 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றவேண்டும்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஆடுகளத்தில் சப்ராஸ் 57 ஓட்டங்களுடனும் சௌபிக் 86 ஓட்டங்களுடனும் ஆடுகளத்திலுள்ளனர்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக டுபாயில் இடம்பெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 482 ஓட்டங்களைக் குவித்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இலங்கையின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 262 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அசார் அலி (59), ஹாரிஸ் சொஹைல் (56) அதிகபட்சமாக ஓட்டங்களை சேர்த்தனர்.
இலங்கை அணி தரப்பில் டில்ருவன் பெரேரா, ஹேரத் தலா 3 விக்கெட்டுக்களையும், லக்மால் மற்றும் கமகே தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் பாகிஸ்தானின் அபார பந்துவீச் சில் இலங்கை அணி திணறியது.
திமுத் (7), சில்வா (3), சதீர (13), லக்மால் (1), சந்திமால் (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பமான நான்காவது நாளில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆனாலும் பாகிஸ்தானை விட 317 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை நம்பிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச களமிறங்கியது.
அதன்படி நேற்றைய நாளில் ஆடுகளம் நல்ல பதத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சுழலும் விதத்தில் மாறிவிட்டதால் டில்ருவானின் பந்துவீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதன் காரணமாக மசூட், சொஹைல், பாபர் ஆசாம் என பாகிஸ்தான் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை அவர் வீழ்த்த, மறுமுனையில் பிரதீப் மற்றும் கமகே ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுக்களை சாய்க்க நேற்றைய 4 ஆம் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியிலும் இலங்கை அணிக்கே வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டு வரலாற்று சாதனைகளை நிலைநாட்டும்.
முதலாவது இலங்கையின் முதலாவது பகலிரவு டெஸ்ட்டில் வெற்றி என்பதும், பாகிஸ்தானின் இரண்டாவது தாயகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய முதல் அணி என்பதுமாகும்.
பெறுத்திருந்து பார்ப்போம் இலங்கை அணியின் வெற்றிக் கனவை பாகிஸ்தான் அணி தகர்த்து தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி வெற்றிபெற்று சாதனைகளை நிலை நாட்டுமாவென.