காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏடிஎம் கார்டை உடைத்து போட்டுவிட்டார். கையில் செலவுக்குப் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு நேரம் என்பதால் எங்கே எப்படி போகவேண்டும் என அவருக்குப் புரியவில்லை. கையில் பணம் இல்லாததால் எங்கும் தங்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் காஞ்சிபுரம் நகரில் சுற்றித் திரிந்தார். இதில் களைப்படைந்த அவர் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் அங்கே கோயிலில் சிலர் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறார். செலவுக்கு பணம் இல்லாததால் அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுத்துள்ளார்.
இதை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி அங்கு வந்தார். அவரை மீட்டுவந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டதால் பிச்சை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். பின்பு அந்த உதவி ஆய்வாளர் செலவுக்கு 500 கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள ரயிலில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி இருக்கிறார்.