சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் புறநகர் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த மாணவர்களில் நால்வரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ரூட் தல’ கலாசாரம் கல்லூரி மாணவர்களிடையே பெருகிவரும் நிலையில், சென்னை ஆவடியை அடுத்து நெமிலிச்சேரியில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள், சென்னை புறநகர் மெட்ரோ ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்துள்ளனர். மேலும், ஆவடி ரயில் நிலையத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்குச் செல்லும்போது, மாணவர்கள் சிலர் ஆயுதங்களைத் தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
கையில் கத்தியுடன் ரயில் நிலையத்தில் சுற்றிவந்த மாணவர்கள் சிலர், போலீஸார் வந்ததும் தப்பி ஓடினர். அவர்களில் நால்வரை போலீஸார் கைதுசெய்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்டிருந்து தப்பியோடிய மற்ற மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்
இதனிடையே, மாணவர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது உறுதியானால், அவர்கள்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகக் கூறிய அவர், தேவைப்பட்டால், மாணவர்கள்மீது டிஸ்மிஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.