ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்: ஜம்மு, ராஜஸ்தான் மாநில கமிட்டி தீர்மானம்

ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் பொறுப்பு வகிக்கின்றனர். சோனியா காந்தி உடல்நலம் குன்றி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதனால், தலைவர் பொறுப்பை ராகுல் காந்திக்கு வழங்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.]

இந்நிலையில், ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், “ காங்கிரஸ் கட்சியானது ராகுல் காந்தி தலைமையில் மக்களின் குரலை பலப்படுத்தி பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவாக உள்ளது. இதனால், ராகுலை கட்சியின் தலைவராக்க அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர். இதற்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேற்கண்ட தீர்மானங்களில் மாநில காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்யும் அதிகாரம் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.