ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே நடந்த ஒரு விழாவில் பங்கேற்க நடிகை ஹன்சிகா வந்திருந்தார். அவரை காண காலை 7 மணியில் இருந்தே ரசிகர்கள் காத்துகிடந்தனர். விழா நடக்கும் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் ஹன்சிகா தோன்றி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
ஹன்சிகா காரில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. அதிவிரைவு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
விழா நடக்கும் இடத்துக்கு வந்த நடிகை ஹன்சிகா விருட்டென்று புகுந்தால் அப்போது அவரை யாரும் பார்க்க முடியவில்லை. இதனால் வெளியே காத்து கிடந்த ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் “ஹன்சிகா”, “ஹன்சிகா” என்று கோஷமிட்டபடி இருந்தனர்.
பிறகு வெளியே வந்த நடிகை ஹன்சிகா மேடை மீது ஏறினார். அப்போது ரசிகர்கள் விசிலடித்தும், கைத்தட்டியும் கரகோஷம் எழுப்பினர். அவர்களை பார்த்து ஹன்சிகா கையை அசைத்தார்.
ஹன்சிகா கையசைத்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கைகளை அசைத்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை பார்த்து நடிகை ஹன்சிகா “பிளையிங் கிஸ்” கொடுத்தார். இதில் மேலும் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் பேசுங்கள்.. பேசுங்கள்.. என்று கூறினர்.
உடனே ஹன்சிகா “ஈரோடு வந்திருக்கேன், ரசிகர்களாகிய உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மட்டும் கூறி பேச்சை முடித்தார்.
பிறகு நடிகை ஹன்சிகா தனது செல்போன் மூலம் மேடையில் நின்றபடி ரசிகர்களுடன் சேர்ந்து ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேடையில் இருந்து இறங்கி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
நடிகை ஹன்சிகா வந்ததையொட்டி அரசு ஆஸ்பத்திரிரோடு, பிரப்ரோடு, மேட்டூர் ரோடு மற்றும் பெருந்துறை ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.