விதிகளை மீறியவரைக் கும்பிட்ட இன்ஸ்பெக்டர்!

வேன் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியாததால் அபராதம், பைக்கில் சென்றவர் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் எனத் தமிழக போலீஸ் குறித்தச் செய்திகளைக் கேட்டு நொந்து போய்க் கிடக்கும் மக்களை ஆந்திர மாநில போலீஸ் ஒருவர் தன் நடத்தையால் மனம் குளிரச் செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டரின் பெரிய கும்பிடு

ஆனந்தப்பூர் மாவட்டம் மடகாசிரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுகுப் குமார். இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, போலீஸ் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஹனுமந்த்ரையா என்பவர் பைக்கில் குடும்பத்துடன் பயணித்துள்ளார். ஹனுமந்த்ரையாவின் மனைவி, மகள், இரு மகன்கள் சகிதமாக பைக் சென்றுகொண்டிருந்தது.

இரு சிறுவர்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தனர். இப்படி பயணிப்பதுதான் ஹனுமந்த்ரையாவின் வாடிக்கை. இன்ஸ்பெக்டர் சுகுப்குமார் ஏற்கெனவே பலமுறை அவரை எச்சரித்திருந்தார். அபராதம் விதித்தும் பயன் இல்லை. ஹனுமந்த்ரையாவின் பைக் 5 பேர் கொண்ட அவரின் குடும்பத்தைச் சுமந்தே அடிக்கடி சுற்றிக்கொண்டிருந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த முறை வித்தியாசமான ட்ரீட்மென்ட் கொடுக்க நினைத்தார். ஹனுமந்த்ரையாவின் பைக்கை நிறுத்தி, அவரைப் பார்த்து தலைக்கு நேரே இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்டார். ‘இன்ஸ்பெக்டர் எங்கே அபராதம் விதிப்பாரோ ‘ என்று பயந்து போயிருந்த ஹனுமந்த்ரையாவுக்கு அவர் கும்பிடு போட்டதும் வெட்கமாகிப் போனது. இனிமேல்,’ விதிகளை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதில்லை’ என்று இன்ஸ்பெக்டருக்கு உறுதியளித்தார்.

போலீஸ் அதிகாரி சுகுப்குமார் கூறுகையில், ” பெட்ரோல் டேங்கில் சிறுவர்களை அமர வைத்தால், அவர்களின் கால்கள் ஹேண்ட்பாரை  இடித்துவிட வாய்ப்பு அதிகம். பெரும்பாலான விபத்துகள் இப்படித்தான் ஏற்படுகின்றன. இது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிறுவர்களை பெட்ரோல் டேங்கின் மேல் வைத்து ஓட்டிச் செல்கின்றனர். ஒன்றரை மணி நேரம் சாலை விழிப்புஉணர்வு குறித்து வகுப்பு எடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். எதிரே ஹனுமந்த்ரையா வழக்கம்போல ஹெல்மெட் அணியாமல் குடும்பத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்ததும் எனக்கு மனமே வெறுத்துப் போனது” என்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!