நடிகர் விஜய் நடித்த ‘ஜில்லா’, நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வி.வி.டி. தேங்காய் எண்ணெய் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி நான் நடித்த விளம்பர படத்தை தனியார் டி.வி.யில் ஒளிபரப்பியது. ஒப்பந்தத்தை மீறியதற்காக எண்ணெய் நிறுவனம் எனக்கு ரூ.2½ கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, விளம்பர படத்தின் காப்புரிமை எண்ணெய் நிறுவனத்திடம் இருப்பதால் காப்புரிமைச் சட்டப்படி விளம்பர படம் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 60 ஆண்டுகளுக்கு அதன் மீதான உரிமை, காப்புரிமை பெற்றவர்களுக்கு சொந்தம் என்று கூறி காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து காஜல் அகர்வால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜீவ்சக்தேர், சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் எண்ணெய் நிறுவனத்துக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு முடிவடையும் வரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.