தமிழ் நாடு கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் நாடு பொலிஸாரின் சார்பாகவே மேற்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கோவையில் மிக வேகமாக அமைக்கப்பட்டுவரும் குறித்த அருங்காட்சியகத்தில், தமிழ் நாடு பொலிஸார் பல்வேறு காலகட்டங்களில் அணிந்த சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் என்பன பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
கோவை தொடருந்து நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் தீயணைப்பு இயந்திரங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் போன்றவற்றுடன் இராணுவத்தில் பயன்படுத்தும் மிக் ரக போர் விமானமும் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் வைக்கப்படவுள்ளதோடு சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் போன்ற போராளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் இந்தியாவிடம் கையளித்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.