மதுவே எனது தற்கொலைக்குக் காரணம் ; பதுளையில் சம்பவம்!

மதுவிற்கு அடிமையாக இருப்பதால், தனது தகப்பனையும் மனைவியையும் கவனிக்க முடியவில்லையென்ற மனக்கவலை மேலிட்ட நபரொருவர் கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதுளைப் பகுதியின் ககட்டருப்ப என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

shutterstock_93662965

ககட்டருப்ப என்ற இடத்தைச் சேர்ந்த அசித்த நிரோசன நலிந்த திசாநாயக்க என்ற 26 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கொழும்பில் ஒரு நிறுவனமொன்றில் சேவை செய்து வந்துள்ளார். தொழிலுக்கு சென்ற பின்னர், அந்நபர் மதுவிற்கு அடிமையாகியிருந்தார். இதனால் அவர் உழைக்கும் வேதனம் முழுவதையும் மதுவிற்கே செலவு செய்து வந்துள்ளார்.

இதனால், அந்நபரின் தகப்பனினதும் மனைவியினதும் வாழ்க்கைச்செலவிற்கும் பணம் அனுப்ப முடியவில்லை. இதுவிடயத்தில் மனமுடைந்திருந்த அந்நபர் இம் முடிவிற்கு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரண விசாரணையின் போது, தற்கொலை செய்து கொண்டவரினால் எழுதப்பட்ட கடிதமொன்றும் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து விடுமுறையில் வீடு வந்திருந்த இந் நபர் பெரும் மனக்கவலையுடன் இருந்தமையும் விசாரணையின் போது முன்வைக்கப்பட்டது.

பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி பி.டபள்யு.எல்.எஸ்.வடுகே பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்கமையவும் “தற்கொலை” என்று தீர்ப்பு வழங்கினார்.