மர்மமான முறையில் இறந்துகிடந்த சதீஷ்குமாரின் தாயார் முனியம்மாள் தொடர்ந்த வழக்கில், மாற்றத்திறனாளி தடகள வீரர் மாரியப்பனைச் சேர்க்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர், மாரியப்பன். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ரியோவில் முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மாரியப்பனின் கார்மீது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் மோதியது. அப்போது, சதீஷ்குமார் மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சில நாள்கள் கழித்து, சந்தேகமான முறையில் சதீஷ்குமார் இறந்துகிடந்தார். இதனால், தாயார் முனியம்மாள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாரியப்பன் மிரட்டியதாக சதீஷ்குமாரின் தாயார் முனியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மாரியப்பன்மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், மாரியப்பனின் கார்மீது இருசக்கர வாகனம் மோதிய பின் சதீஷ்குமார் மிரட்டப்பட்டதாகவும், இதுதொடர்பாக அளித்த புகாரில், மாரியப்பன் பெயரைக் காவல்துறையினர் சேர்க்கவில்லை என்றும், இதனால் இந்த வழக்கில் மாரியப்பனின் பெயரைச் சேர்க்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், பாதுகாப்பு கோரியும் முனியம்மாள் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், மிரட்டல் வழக்கில் மாரியப்பன் பெயரைச் சேர்க்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, பாதுகாப்புக் கோரிய முனியம்மாள் மனுமீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.