எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியில் போட்டியிடுவதற்கு முன்வரும் தமிழர்களுக்கு வீடும், பண உதவிகளும் செய்யப்படும் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ தனது அம்பாந்தோட்டை இல்லத்தில் சில தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போது அர்ப்பணிப்பும், திறமையும் மிக்க நன்கு அரசியல் செய்யக்கூடிய தமிழர்களை தனது கட்சிக்கு இணைத்துத் தருமாறும், அவர்களுக்கு தான் வீடும், பண உதவிகளும் செய்வதாகத் தம்மிடம் தெரிவித்ததாக குறித்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்டு எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்றும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் எனவும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும், அத்துடன் கடந்தகால கசப்பான அனுபவங்களையிட்டு தான் கவலையடைவதாகவும், எதிர்காலத்தில் அவை அனைத்தும் சீர்செய்யப்படும் எனவும் மகிந்த தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.