பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்கிறார்கள் என்று ஐதராபாத் குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
தெலுங்கானா மாவட்டம், ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 402 தற்கொலைகள் பதிவாகியுள்ளது.
அவர்களில் 265 பேர் ஆண்கள். இதில், தூக்கு போட்டு 204 பேரும், விஷம் குடித்து 39 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று பெண்களில் 137 பேரில், தீக்குளித்து 15 பேரும், விஷம் குடித்து 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து ஐதராபாத் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கான உண்மையான காரணங்கள் கண்டறிவது மிகவும் கடினம்.
பெண்களை விட ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
வேலை பளு, மன அழுத்தம், கடன் பிரச்சினை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது, என்றார்.
இதுகுறித்து மனநல மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஆண்கள் உடனடியாக உணர்ச்சி வசப்படுகிறார்கள்.
பெண்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளானாலும், ஆண்கள் வெளிக்காட்டுவதில்லை. அது தான் அவர்களை தற்கொலையை நோக்கி இழுத்து செல்கிறது.
பெண்களின் மன அழுத்தத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம். ஆனால், ஆண்களின் மனஅழுத்தத்தை கண்டறிவது மிகவும் கடினம் என்றனர்.