பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் தமிழ் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்து எழுதியுள்ளது.
பல உயிர்களை காத்த கடவுள் எனவும் குறித்த நாளிதழ் அவரைக் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளதால் இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானிய நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலர் குணசேகரன் குமாரின் அர்ப்பணிப்பு மிக்க வைத்தியத்தால் மீண்டுள்ளனர்.
வேல்ஸ் பகுதியில் நிறைமாதக் கர்பிணியாக இருந்த தாய் ஒருவர், தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது பெரும் விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அங்கே பணியில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்துள்ளார்.
குறித்த பச்சிளம் சிசுவுக்கும் அந்த நேரத்தில் மார்பில் ஒரு பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்த குணசேகரன் குறித்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தார். அத்துடன் தொடர்ந்து 7 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர் சிசுவையும் தாயாரையும் காப்பாறியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ’வெறோனிக்கா ஜோன்ஸன்’ என்னும் குறித்த குணசேகரன் பற்றி முகுந்த பெருமையோடு கூறியுள்ளார். “என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன், அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர். நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்ப்பணித்தாலும், அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டும் ஆபத்தான வீதி வளைவொன்றில் மிக மோசமான விபத்தில் சிக்கிய உந்துருளி ஓட்டுநர் ஒருவரும் குணசேகரனால் கஸ்டப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்.
குறித்த நபர் விபத்தில் விலா எலும்புகள் நொருங்கி கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குணசேகரனின் மருத்துவ திறமையினால் உயிர் பிழைத்தார்.
ஆனால் மருத்துவர் குணசேகரன் மிகவும் எளிமையான ஒரு மருத்துவர் என்பதுடன், அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.