கடந்த 2010 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவருக்கு கட்டாய திருமணம் நடந்த நிலையில், அந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுசீலா. 19 வயதான இவரை கடந்த 2010ல் 12 வயதில் அவரின் குடும்பத்தார் நரேஷ் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் சுசீலா தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் சுசீலாவுக்கு 18 வயதாகிய நிலையில் அவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய குடும்பத்தார் கணவர் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சுசீலா குடும்பத்தாரிடம் தன்னை அனுப்பாதீர்கள் என கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்து தப்பிசென்ற சுசீலா கிருதி பாரதி என்ற உளவியலாளரிடம் அடைக்கலம் தேடி சென்றுள்ளார்.
கிருதி, சுசீலாவை காப்பகம் ஒன்றில் தங்க வைத்த நிலையில் அவருக்கு நடந்த கட்டாய திருமணம் செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் சார்பில் சுசீலாவை திருமணம் செய்த நரேஷிடம் விசாரிக்கப்பட, அவர் தனக்கு திருமணமே ஆகவில்லை என முதலில் கூறியுள்ளார். பின்னர் நரேஷின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் சுசீலாவை திருமணம் செய்தது குறித்த அவரின் பதிவு அதில் இருந்ததோடு, அவரின் நண்பர்கள் சிலர் திருமணத்துக்கு சென்றதும் தெரியவந்தது.
இந்த சாட்சிகளை வைத்து நீதிமன்றம் சுசீலாவுக்கு நடந்த கட்டாய திருமணம் செல்லாது என தற்போது தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, தனது படிப்பை தொடர முடிவெடுத்துள்ள சுசீலா வருங்காலத்தில் பொலிஸ் அதிகாரி ஆவேன் என தெரிவித்துள்ளார்.