மரித்துப் போனதா மனிதநேயம்? ஆதரவற்ற முதியவரை குப்பையில் வீசிய மருத்துவமனை!

நெல்லையில்  ஒருவரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் குப்பையில் தூக்கி வீசிய மனிதாபிமானமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (24)

தென் மாவட்டங்களில் முக்கியமான அரசு மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனையில் தினமும் 5,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உள்நோயாளிகளாக 1,400 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது டெங்கு தீவிரம் அடைந்துவரும் நிலையில் கூடுதலாக ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையின் வார்டு ஒன்றில் உடைந்த வீல் சேர் பயன்படுத்தப்படுவதாக புகைப்படத்துடன் வாட்ஸ்அப் தகவல் ஒன்று கடந்த மாதத்தில் வைரலாக உலா வந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறையின் சார்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ’பழைய பொருள்கள் இருந்த அறையை சுத்தம் செய்தபோது அதில் கிடந்த பழைய வீல் சேரை வெளியே போட்டு இருந்தனர். அதை யாரோ புகைப்படம் எடுத்து திட்டமிட்டு தவறான கருத்தைப் பரப்பி விட்டனர்’ என மருத்துவமனையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக அந்த வார்டின் பொறுப்பாளரான நர்ஸிடம் மட்டும் விளக்கம் எழுதி வாங்கப்பட்டது.

தற்போது இந்த மருத்துவமனை மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவருக்கு உதவிக்கு ஆள் இல்லாத நிலையில் அவரால் பாத்ரூம் செல்லக்கூட எழுந்து செல்ல இயலவில்லை. அதனால் பெட்டிலேயே சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதால் அவரை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டெச்சரில் தூக்கிச் சென்று குப்பைகளுக்குள் போட்டுவிட்டனர். மனிதாபிமானம் இல்லாத இந்த கொடுஞ்செயல் குறித்து வெளியில் தெரியவந்ததும் மீண்டும் மருத்துவ ஊழியர்கள் அந்த முதியவரை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தனர்.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவமனையின் டாக்டரிடம் கேட்டதற்கு, ‘கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்கோ விபத்தில் சிக்கிய அந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் அழைத்து வந்து இங்கே சிகிச்சைக்காக சேர்த்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. முதுமையின் காரணமாக அவருக்கு சரியான நினைவும் இருக்கவில்லை. அதனால், தான் யார்? என்பதையோ எந்த ஊர் என்பதையோ சொல்லத் தெரியவில்லை. அவருக்கு உதவிக்கு யாரும் இல்லாத நிலையிலும் மருத்துவமனை ஊழியர்களே அவரை சரியாக பராமரிக்கிறார்கள். அவருக்கு உரிய நேரத்துக்கு உணவு கொடுப்பது மட்டும் அல்லாமல் ஊழியர்களே அவருக்கு உடையும் கொடுத்து பராமரிக்கிறார்கள். அதனால் அவரை ஊழியர்கள் யாரும் வெளியில் தூக்கிச் சென்று போட்டிருக்க வாய்ப்பு இல்லை. அவராகவே வெளியில் தவழ்ந்து போயிக்கக் கூடும். ஆனால் யாரோ தவறான தகவலைப் பரப்பி விட்டார்கள்’’ என்று தெரிவித்தார். அந்த முதியவர் குப்பைக்குள் அநாதையாக கிடந்த புகைப்படத்தை அந்த மருத்துவரிடம் காட்டி விளக்கம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.