அதிகார மையமாகவே இருந்த சசிகலாவின் சகாப்தம் முடிந்து விட்டது என்பதை அவர் தமிழகத்திற்கு பரோல் விடுப்பில் வந்தது உணர்த்தியிருக்கிறது. இனிதான் அவருக்கான உண்மையான சிறைத் தண்டனை தொடங்குகிறது.
சசிகலா, அதிமுகவில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் அழிக்க முடியாத ஒரு பெயராக இருந்தது. ஜெயலலிதா இருந்த கால கட்டத்திலும் அவருக்கு நிழலாக செயல்பட்டு வேட்பாளர் நியமனம் முதல் அதிகாரிகள் மாற்றம் வரை அனைத்தையும் அவர் தான் பார்த்துக் கொள்வார் என்பது அனைவருக்குமே அரசல் புரசலாக தெரியும்.
அதிமுகவின் வரலாற்றுப் பக்கங்களில் மன்னார் குடி குடும்பத்தின் பங்கு இல்லாத கால கட்டம் என்பது மிகக் குறைவே. ஜெயலலிதாவுடன் நிழல் போல இருந்து பார்த்துக் கொண்ட சசிகலா தான் அதிமுகவையும் நிழல் உலக தாதாவாக இருந்து ஆட்டிப் படைத்தார்.
சசிகலாவிற்குத் தெரியாமல் எந்த ஒரு விஷயமம் ஜெயலலிதாவை எட்டி விட முடியாது. வெளியுலகிற்கு இரும்புப் பெண்மணியாக இருந்த ஜெயலலிதாவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சசிகலா.
சசிகலா இல்லாமல் காலத்தை நகர்த்த முடியாது என்ற அளவிற்கு அத்தனைக்கும் சசிகலாவையே சார்ந்து இருந்தார் ஜெயலலிதா. இதுவும் சசிகலாவிற்கு சாதகமாகிப் போனது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தான், ஜெயலலிதாவிற்கு சகலமும் தான் தான் என்பதை போட்டு உடைத்தார் சசிகலா.
நான் ஜெயலலிதாவை பார்த்துக் கொள்வேன், ஓய்வு நேரத்தில் போயஸ் கார்டன் வரும் மனுக்களை படித்து ஜெயலலிதாவிடம் சொல்வேன் என்று கூறினார்.
அப்போது தான் அரசல் புரசலாக பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை என்பது விளங்கியது. கடந்த 33 ஆண்டுகளாக அதிகார மையமாக திகழ்ந்து வந்த சசிகலாவால் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அந்த இரும்புக் கோட்டை என்ற பிடியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
அதிமுக கைநழுவிவிடும் என்ற அவசரத்தில் கட்சிக்கு பொறுப்பேற்று அதனைத் தொடர்ந்து உடனடியாக ஆட்சிக் கட்டிலிலும் ஏறத் துடித்தார்.
சசிகலாவின் கனவு தகர்ந்து போனது. சசிகலா குடும்பத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் முதல் போர்க்கொடியை பிடித்தார். ஜெயலலிதாவையே ஆட்டிப்படைத்த தன்னையே எதிர்க்கிறார் என்று சசிகலா கொதித்தெழுந்தார். ஆனால் விஷயங்கள் எதுவும் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லும் வரை தான் தான் கட்சியிலும், ஆட்சியிலும் என்ற நினைப்புடனே இருந்தார்.
ஜெயலலிதா சிறையில் இருந்த போது எப்படி அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு கட்சியும், ஆட்சியும் நடந்ததோ அப்படியே இப்போதும் நிலைமை இருக்கும் என்று சசிகலா நினைத்தார்.
சசிகலாவின் கணக்கு தப்புக் கணக்காகிப் போனது. அதிமுகவும், கட்சியும் நம் கைவிட்டு நழுவுகிறது என்று அவ்வப்போது சிறைக்கு சென்று தினகரன் ரிப்போர்ட் கார்டு அளித்து வந்தார்.
ஆனால் அப்போதும் இவை அனைத்தும் சரியாகி விடும் என்று தினகரனை பொறுமையாகவே இருக்கச் சொன்னார் சசிகலா.
சிறைக்கு செல்லும் முன்னர் நிலைமை எப்படி இருந்ததோ அப்படித் தான் இப்போதும் நிலைமை இருக்கும் என்று எண்ணி இருப்பார் சசிகலா.
ஆனால் கணவரின் உடல்நிலை சரியில்லை என்று 5 நாட்கள் பரோலில் சென்னை வந்த சசிகலாவிற்கு தற்போது தங்கள் குடும்பத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பங்கும் இல்லை என்ற உண்மை நிலை வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.
ஜெயலலிதா இல்லையென்றால் சசிகலா என்ற ஒருவர் இல்லை என்பதை அவர் இந்த பரோல் விடுப்பில் உணர்ந்திருப்பார். சசிகலா சிறையில் இனி கழிக்கப் போகும் எஞ்சிய காலங்கள் தான் உண்மையிலேயே அவருக்கான தண்டனைக் காலமாக அமையும்.