வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலச் சூழலில், சாதாரணமாக ஏற்படும் பொதுவான பாதிப்புகள்கூட தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி, தீர்க்க முடியாத அளவுக்கு ஒருவரை வேதனைக்குள்ளாக்கி விடுகிறது.
அப்படியிருக்கும்போது, விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்துக்கு இன்றளவும் சவால்கள் நிறைந்ததாகக் கருதப்படும் அதேசமயம், இன்று பெரும்பாலானவர்களால் ஓரளவு உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கும் செய்வினை, திருஷ்டி, மருந்து வைத்தல், ஆவிகள் தொல்லை, சில சாப தோஷங்கள் போன்றவற்றால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகும்போது, கடும் உடல் உபாதைகள், மன நோய்கள், வாழ்க்கைச் சீரழிவு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் விபரீத முடிவுகளால் அவரது வாழ்வே நாசமாகிவிடுகிறது.
இப்படிப்பட்ட சூழல்களில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதி இல்லாமல் இருப்பவர்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் மட்டுமே முழுத் தீர்வு என்பது சாத்தியமாகிறது.
நம் அறிவுக்குப் புலப்படாத பிரச்னைகளால் அவதிப்படும்போதுதான் தீர்வுகளைத் தேடி ஓடுகிறோம். பரிகாரங்கள், வழிபாடுகள் என பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறோம். இதுபோல் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகள் என்பது பிரச்னைகளுக்கான காரண, காரியங்களை அலசி ஆராய்ந்து, மூல காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப வழிமுறைகளைக் கையாள்வதில்தான் ஒருவரை பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கமுடியும்.
உதாரணமாக, வயிற்றில் வலி ஏற்படுகிறது. மருத்துவரைப் பார்க்காமலேயே, மருந்துக் கடைக்குச் சென்றாலே மருந்து கிடைத்துவிடும். அது ஒரு சாதாரண உபாதையாக இருக்கும்போது அதுவே போதுமானதாகிறது. ஆனால், வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணம் வேறாக இருந்துவிட்டால், அதற்கேற்ப MBBS மட்டுமல்லாமல், MD, MS படித்த சிறப்பு மருத்துவர்களை நாடி, SCAN போன்ற பரிசோதனைகளைக்கொண்டு காரணங்களைக் கண்டறிந்த பிறகே, வயிற்று வலிக்கான தீர்வு கிடைக்கும். இந்தச் செயல்முறையைத்தான் ஜோதிட சாஸ்திரம் தனது அடிப்படை செயல்பாடாக வைத்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, துயரங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதையும், அதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பதையும் ஒருவரைப் புரிந்து உணரச் செய்து, எம்மாதிரியான சரியான வழிமுறைகளை மேற்கொள்ளச் செய்வதன் மூலம் அத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு அவரை குணமடையச் செய்யமுடியும் என்பது போன்ற முழுமையான தகவல்களை ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து மட்டுமே பெற முடியும்.
பெரும்பாலும், சரியான தீர்வுகளுக்காக உடல் மற்றும் மனம் சார்ந்த முறைகளிலேயே நம் முயற்சிகள் இருந்துவருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இதில் தவறு இல்லை. ஆனால், ஆன்மாவை தொடர்புபடுத்தி முயற்சிகள் மேற்கொள்ளாதவரை, பெரும்பாலான விஷயங்களில் சரியான தீர்வுகள் என்பது கிடைக்காமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை. உடல் சார்ந்து மேற்கொள்ளும் ஆலய வழிபாடுகள், பூஜைகள், ஹோமங்கள், பரிகாரங்களும், மனம் சார்ந்து மேற்கொள்ளும் தியானம், யோகா போன்ற வழிமுறைகளும் நமக்குப் பயன் அளிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆன்மாவைப் பற்றிய தெளிவு இல்லாது, முழுமையான அடிப்படை மாற்றங்களை அவற்றில் இருந்து பெற இயலாதபோதுதான் நாம் தவிக்க நேரிடுகிறது.
ஆன்மாவை தொடர்புபடுத்துவது என்பதுதான் இறைவனைப் புரிந்துகொள்வதற்கான முதல் படிநிலையாகும். இறைவனுக்காக நாம் செய்யும் பூஜை, புனஸ்காரங்களை இறைவன் ஏற்றுக்கொள்வது என்பது வேறு; இறைவனைப் புரிந்து உணர்வது என்பது வேறு. நாம் ஒவ்வொருவரும் கடினமான சூழ்நிலைகளில் இறைவனை தஞ்சம் அடைகிறோம். அது ஒவ்வொருவராலும் முடியக்கூடிய ஒன்றே. ஆனால், பல்வேறு வழிகளில் இறைவழிபாடுகள் செய்தும் ஒரு பயனும் கிட்டவில்லையே என அங்கலாய்ப்பவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். காரணம், இறைவனைப் புரிந்து உணர்வதில் நமக்கு உள்ள அறிவுக் குறைபாடுதான்.
வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் கலைகள் அனைத்தும், இறைவனைப் புரிந்து உணர இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட கொடைகளே. இன்றைய நவீன உலகில், மனித வாழ்வு என்பது இறை நியதிகளைப் புரிந்துகொள்வது என்பதில் இருந்து விலகி, தனது பகுத்தறியும் அறிவால் விஞ்ஞானம் என்னும் வளர்ச்சி கண்டு, தன் வழியில் வாழவே இவ்வுலகு என்ற அளவிலேயே பார்க்கப் பழகிவிட்டோம். இதனால், இறை நியதிகளைப் பற்றிய அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்வதில் சிக்கல்களைப் பெற்றுவிட்டோம்.
இறைவனைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பாதையே பக்தி மார்க்கம். பால் தயிராக மாறுவது போன்ற ஒரு மாற்றத்தைத்தான் நம்மிடம் கொண்டுவருகிறது. தவறுகளை உணரச் செய்து, நம்மிடம் நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்தி வாழ்வை மேம்படச் செய்வதில் பக்தி மார்க்கம் நமக்கு வாழ்க்கைத் துணையாகிறது.
பாலின் அளவு எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. பால் முழுவதையும் தயிராக மாற்ற ஒரு சொட்டு தயிரே போதுமானது. அதுபோல், நம்மிடம் எத்தனை குறைகள், குற்றங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் காரணமாக எத்தனையோ துயரங்களுக்கு நாம் ஆட்படலாம். ஆனால், இதை ஏன் இன்று நம் வாழ்வில் அனுபவிக்க நேரிடுகிறது. இத்தகைய துன்பங்களை அனுபவிக்க இறைவன் நம்மை ஏன் விட்டிருக்கிறான் என்பதற்கான காரண காரியங்களை அறிவதிலேயே இறை நியாயங்கள் புரிந்துகொள்ளப்படுகிறது..
நாம் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்ள இறைவன் வைக்கும் சோதனைகளே நமக்கு ஏற்படும் துயரங்களுக்குக் காரணமாகிறது. இதைப் புரிந்துகொண்டு தவறுகளை திருத்திக்கொள்வதில்தான் நமக்கான தீர்வு மட்டுமல்ல; இறைவனின் விருப்பமும் உள்ளடங்கியுள்ளது. உண்மையில், இறைவன் யாரையும் தண்டிப்பதில்லை. அது அவருடைய செயலுமல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது.
போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினுள் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் இது, திருப்பாவையில் ஆண்டாள் பாசுரத்தில் உள்ள ஒரு வாக்கியமாகும். இதன் பொருள், மலை போல் பொருட்கள் குவிந்திருந்தாலும், ஒரு பொறி நெருப்பானது அனைத்தையும் எரிந்து சாம்பலாக்கிவிடுவதுபோல, முற்பிறவிகளில் செய்த பிழைகள் மட்டுமல்லாது, இந்தப் பிறவியில் செய்த பிழைகளையும் ஒருவர் இறைவனைப் புரிந்து உணரும்போது அவற்றை ஒன்றுமில்லாமல் இறைவன் செய்துவிடுகிறான் என்பதுதான்.
இறை நியாயங்களைப் புரிந்துகொள்ள பக்தி மார்க்கமே போதுமானதாக இருந்தவரை, ஜோதிட சாஸ்திரத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெறவில்லை. அன்றைய காலகட்டத்தில், ஜோதிடம் என்பது அரசு குடிபிறப்புகள், சமுதாயத்தில் அந்தஸ்துள்ள பெரிய மனிதர்கள் போன்றவர்களுக்கு என்றே இருந்துவந்தது. கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில், சாதாரண மனிதர்களிடத்தும் ஜோதிடம் வந்தடைந்ததற்கான காரணம், பக்தி மார்க்கத்தின் மூலம் இறை நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவு விலகி, விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடு ஒன்றி வாழப் பழகிவிட்டோம் என்பதுதான். இந்நிலையில்தான், ஜோதிட சாஸ்திரத்தின் பயன்பாடு நமக்கு அவசியமானது.
இறை நியாயங்களைப் புரிந்துகொள்வதில் இன்றைய காலகட்டத்தில், நமக்கு ஏற்படும் கடினங்களை ஜோதிட சாஸ்திரம் எளிமைப்படுத்தி நம்மை உணரவைத்து வாழ்வில் வெற்றிபெறச் செய்கிறது. ஜோதிட சாஸ்திரமும் இறை நியாயங்களை நமக்கு உணர்த்தி பக்தி மார்க்கத்துக்குத்தான் அழைத்துச்செல்கிறது. பக்தி மார்க்கத்தை மட்டுமே பின்பற்றினாலும் சரி; ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றினாலும் சரி; இறை நியாயங்களைப் புரிந்து உணர்ந்துகொண்டோமா என்பதுதான் முக்கியம். அதை உணராது நிரந்தரத் தீர்வுகள் சாத்தியம் இல்லை.
ஜோதிட சாஸ்திரத்தில் இறை நியாயங்களைப் புரிந்து உணர்வது என்பது, ஆன்மாவை தொடர்புபடுத்திப் பார்ப்பதில்தான் முழு நிறைவு பெறுகிறது. அதாவது, நமக்கு வாய்த்த உடல் மற்றும் மனத்தின் அறிவு மட்டுமல்ல; இவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவும் சேர்ந்ததுதான். இங்கு உடல் மற்றும் மனம் என்பது இந்தப் பிறவியுடன் முடிந்துவிடும். ஆன்மா மட்டும்தான், அது சேகரித்து வைத்துள்ள அனுபவங்களையும் சுமந்துகொண்டு, ஆன்மாவுக்கெல்லாம் ஆன்மாவாக உள்ள பரமாத்மாவை சேரும் வரை, பல்வேறு பிறவிகளை எடுத்து இறுதியில் பரமாத்மாவை அடைகிறது. அதுவரை ஆன்மாவின் பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு ஆன்மாவையும் பரமாத்மாவுடன் இணைப்பதே இறைவனின் விருப்பமும் ஆகும்.
வராஹமிஹிரர், ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள கணிதஸ்கந்தம் என்ற முதல் நூலை இயற்றிய பிறகு, ஹோரை என்ற ஜாதக சாஸ்திரத்தை செய்யத் தொடங்கி, தான் எடுத்த காரியம் இடையூறின்றி நிறைவேற வேண்டும் எனவும்; உலகில் நீடூழிகாலம் விருத்தியாக வேண்டும் எனவும் கருதி, தனது இஷ்ட தேவதையான சூரிய பகவானிடம் வாக்கின் பெருக்கைக் கோரும் தனது முதல் ஸ்லோகத்தின் இரண்டாம் வாக்கியத்தில் இவ்வாறு கூறுகிறார்
மாத்மேத்யாத்மவிதாம் க்ரதுச்ச யஜதாம் பர்த்தாமர ஜ்யோதிஷாம்
இறைவனை சரணடைய, அதாவது பரமபதம் செல்கிறவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் ஒரு எளிய மார்க்கமாக விளங்குகிறது என்பதே இதன் பொருள். அதாவது, இறைவனின் விருப்பமான பரமாத்மாவுடன் இணைவதற்கு, அதாவது ஒரு ஆன்மா தன் இறுதி லட்சியமான பரமாத்மாவுடன் கலப்பதற்கு, அதாவது முக்தி அடைவதற்கு ஒரு உயர்ந்த சாதனமாகவே ஜோதிட சாஸ்திரம் ஏனைய சாஸ்திரங்களைவிட உயர்ந்ததாகிறது என்பதுதான் இதன் உள்பொருள்
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதுதான் ஒரு மனிதன் வாழ்வில் அடையும் நான்கு புருஷார்த்தங்களாகும். அறம், பொருள், இன்பங்களை ஒருவன் அடைந்து கடைசியில் வீடுபேறு (முக்தி) அடைவதில்தான் அவன் வாழ்வு முற்றுப்பெறுகிறது. இதை எளிய வழிகளில் ஒருவனை அடையச் செய்ய ஜோதிட சாஸ்திரம் உறுதுணையாவதால்தான், இது வேத புருஷனுடைய கண்ணாக வேதத்தில் சொல்லப்படுகிறது. எனவே, இந்த மேலான சாஸ்திரத்தை நன்கு அறிபவன் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என நான்கு புருஷார்த்தங்களையும் அடைவதுடன், இவ்வுலகில் நல்ல கீர்த்தியையும் அடைவான் என்பதால், ஒவ்வொருவரும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை அம்சங்களையாவது தெரிந்துகொள்வதுதான் வாழ்வின் சந்தோஷத்துக்கான முதல் படிநிலை ஆகும்.
நம்முடைய ஆன்மா பல்வேறு பிறவிகளில் கடந்துவந்த பாதைக்கும், இனிமேல் அது கடக்கவிருக்கும் பாதைக்கும் இடைப்பட்ட ஒரு நிகழ்வுதான் இந்தப் பிறவியில் நம் வாழ்ந்துகொண்டு இருப்பது. இதை உணர்ந்துகொண்டால் உடல், மன ஈர்ப்புகளைத் தாண்டி ஆன்மாவின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவோம். இது புரியாதவரை, ஜோதிடம் பார்த்துப் பயன் பெறுகிறேன், வழிபாடுகள் செய்து பலம் பெறுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
உலகில் இன்று, ஜாதகத்தை கணித்து எடுத்து வைத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் இருக்கமுடியாது. பிறந்த இடம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, நிமிட துல்லியமாகக் கணிக்கப்படும் ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மாவைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியுமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வியாகும். தெரிந்துகொள்வோம், காத்திருங்கள்.