”தொடர்ந்து பிச்சை எடுப்பேன்!” – ரஷ்ய இளைஞர் தடாலடி

ஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ், ஏ.டி.எம் கார்டு லாக்காகிவிட்டதால், காஞ்சிபுரம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சையெடுத்தார். காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பினார்கள். ஆனால், அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்துக்கு வரவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிச்சையெடுத்த ரஷ்ய இளைஞர்

போலீஸார் அந்த ரஷ்ய இளைஞரைத் தேடிவரும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள போக் சாலையில் மற்றொரு டூரிஸ்ட்டுடன் அவரைப் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்துள்ளார். அந்தப் பத்திரிகையாளரிடம் ரஷ்ய இளைஞர் கூறியதாவது, ”எனக்கு ரஷ்ய தூதரக உதவித் தேவையில்லை. ட்ராவல் செய்வது பிடித்துள்ளது. அதற்காகத் தொடர்ந்து மக்களிடம் பிச்சையெடுப்பேன். இப்போது மீடியாக்களில் செய்தி வந்திருப்பதால் என்னைப் பார்த்தால் நிறைய பேர் பேசுகிறார்கள். அவர்களிடம் 100 ரூபாய் நான் கேட்கிறேன். இப்போது கொஞ்சம் பணம் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பிச்சையெடுப்பேன். பெங்களுரு செல்வது என் அடுத்தத் திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

எவ்ஜினி பெர்டிகோவுக்கு இந்தியா வருவதற்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் கிடையாது. மனம்போன போக்கில் ட்ராவல் செய்வது மட்டும்தான் அவரின் இலக்கு. பெர்டிகோவின் கைகளில் முன்னதாக அவர் சென்று வந்த, நாடுகளின் கொடிகளைப் பச்சைக்குத்தியுள்ளார். சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியக் கொடியை பச்சைக்குத்தியிருக்கிறார். நவம்பர் 22-ம் தேதி வரை அவருக்கு இந்திய விசா உள்ளது.