நில்வள ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் ஒருவரை பொலிஸார் காப்பாற்றிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றிலேயே குறித்த இளைஞர் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த இளைஞன் பேஸ்புக் மூலம் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.
இக் காதல் விவகாரம் காதலியின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் காதலியின் உறவு முறை பெண் ஒருவர் இவர்களது காதல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு குறித்த இளைஞனை மாத்தறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காதலியின் வீட்டார் அழைப்பை ஏற்ற இளைஞன் நேற்று மாத்தறைக்கு சென்று மஹானாம பாலத்தின் அருகில் காதலிக்காக காத்துக் கொண்டிருந்த வேளையில் காதலிக்கு பதிலாக அங்கு அவரின் குடும்ப உறுப்பினர்களே வந்துள்ளனர்.
காதலியின் உறவினர்கள் குறித்த இளைஞனை சுட்டிக்காட்டி திருடன் திருடன் என கூச்சலிட்டு இளைஞனை தாக்கிய போதே இளைஞன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் ஆற்றில் குதித்தள்ளார்.
இளைஞர் ஆற்றில் குதித்ததும் காதலியின் உறவினர்கள் ‘இதோ ஆற்றில் இளைஞன் ஒருவன் குதித்து விட்டான்’ என தாங்கள் தவறு எதுவும் செய்யாதது போலவும் தங்களுக்கும் குறித்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லாதது போலவும் கூச்சலிட்டுள்ளனர்.
பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் அருகில் இருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து பலத்த போராட்டத்தின் பின்னர் இளைஞனை காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றிய இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போதே குறித்த இளைஞன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவுமே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர் இளைஞனை தாக்கிய காதலியின் குடும்பத்தாரை கைது செய்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.