மர்மநபர்களால் கத்திரிக்கப்படும் பெண்களின் தலைமுடி…. காஷ்மீரில் தொடரும் குழப்பம்!

டந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவர் வெளியே சென்றிருக்க, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் 35 வயதான குல்ஷன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கணவர்தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவைத் திறந்தவருக்குப் பெரிய அதிர்ச்சி. வாசலில் முகமூடி அணிந்திருந்த இரண்டு நபர்கள். சட்டென கையிலிருந்த ஒரு ஸ்ப்ரேயினை அடிக்க, அலறியபடியே மயங்கி விழுந்துவிட்டார் குல்ஷன். அந்த அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்துவரும் ஹுசைன் அஹமது வந்து பார்த்தார். முகத்தில் ஏதோ திரவம் வழிய, தலைமுடி கத்தரிக்கப்பட்டு மயக்கநிலையில் கிடந்திருக்கிறார் குல்ஷன்.

104943_thumb

அதற்கு ஒரு வாரம் முன்பு… முதல் நாள் இரவில் மீந்துபோன உணவை வெளியே கொட்வதற்காக, குப்பைக்கூடையுடன் வீட்டு வாசலில் நின்றிருந்த ரேயாஸின் முகத்தில், இரண்டு மர்ப நபர்கள் ஸ்ப்ரேயினை அடித்து, முடியைக் கத்தரித்து அருகிலேயே போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, வீட்டைவிட்டு வெளியே வருவதையே நிறுத்திவிட்டார் ரேயாஸ்.

தலைமுடி

இதெல்லாம் எங்கே நடந்தது? இப்படியெல்லாம் நடக்குமா? நடந்துள்ளதே. கடந்த ஒன்றரை மாதத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள், காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ஒரு மசூதியைச் சேர்ந்த இமாமின் தாடியும் வெட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி, நைரா நசீம் என்கிற பள்ளி மாணவி, அனண்ட்னக் ஊரில் அவரது வீட்டுக்கு வெளியே. தலைமுடி கத்தரிக்கப்பட்ட நிலையில் மயக்கமாக இருந்ததுதான் முதலில் நடைபெற்ற சம்பவம். ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் இதுபோன்ற ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இப்போது காஷ்மீரில்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்க காஷ்மீர் மாவட்டம்தோறும் ஹெல்ப்லைன் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல, குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு மூன்று லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெம்ப்லேட் வசனத்தை காவல் துறை சொல்லியிருக்கிறது. ஆனால், பல நேரங்களில் காவல் நிலையத்துக்கு போன் செய்தும் எந்தவிதப் பதிலும் அளிக்காமல், இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். காவல் துறையே இந்த மர்ம நபர்களுக்கு உதவுகிறார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் அந்த மக்கள்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மாலிக், “இதுபோன்ற சம்பவங்களால் காஷ்மீர் மக்களின் ஒற்றுமையையும் போராட்ட உணர்வையும் ஒடுக்கிவிட முடியாது. கல்லெறிந்தார்கள் எனச் சொல்லி சம்பந்தமேயில்லாமல் சிறுவர்களைச் சிறையில் அடைக்கும் காவல் துறையால், இத்தனை நாளாகியும் இந்தக் குற்றவாளிகளை மட்டும் கண்டறிய முடியவில்லையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அரசுக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டங்களை திசைதிருப்பவே இதுபோன்ற மர்மச் செயல்களை அரசு நடத்துவதாக காஷ்மீரின் பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து ட்விட் செய்திருக்கும் காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்டி, ‘இந்த மர்மத்தின் நோக்கத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யும். இந்தச் சம்பவங்கள் பெண்களின் மரியாதையைக் குலைப்பதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் காஷ்மீர் பெண்களிடையே மனதளவில் அதிக தாக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலிக்காகக் காத்திருந்த இளைஞர், விடியற்காலையில் வெளியே நடைப்பயணத்துக்காக வந்த 70 வயது முதியவர், வழிதவறிய வெளிநாட்டினர் எனப் பலரும் மர்ம நபர்களாகச் சந்தேகிக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். காஷ்மீர் மாதிரியான மிக அதிகமாக ராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில், இதுபோன்ற சம்பவங்கள் அரசுக்குத் தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் சந்தேகிக்கிறார்கள். இந்தச் சம்பவங்களைக் கண்டித்து காஷ்மீர் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்கள் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.