யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரையும் கைது செய்திருந்தனர்.
அத்துடன், வடக்கில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
எனினும், வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். மானிப்பாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்த நிலையில், நேற்று(12) யாழ். சாவகச்சேரி பகுதியில் மற்றும் ஒரு வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
காலை வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவின் பதிவுகள் வெளியாகியுள்ளன.
இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இளைஞர்கள், அந்த பகுதியில் இருந்த இளைஞர்களை துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.