இன்றைய தினம் காலை மருதனார்மடம் சந்தைக்கு சென்றிருந்தேன். அச்சந்தையின் வெளிப்புற கடைத்தொகுதியில் இயங்கும் மானிப்பாய் தினேஸ் பேக்கரியின் விற்பனை நிலையத்திற்கு முன்பாக எனது உந்துருளியை (மோட்டார் சைக்கிள்) நிறுத்திவிட்டு சந்தைக்குள் சென்று பொருட்களை வாங்கியதன் பின் திரும்பி எனது உற்துருளியில் திறப்பை சொருகும் போது நீளக்காற்சட்டை, சேட் போட்ட ஒருவர் வந்து பத்து ரூபா தருமாறு கேட்டார்.
எனக்கு ஆச்சரியம் யாசிப்பவர்கள் (பிச்சை எடுப்பவர்கள் – அவரைப் பார்க்க அப்படித்தான் இருந்தது) இப்போது நி்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வாங்குகின்றார்களா என்று எனக்கு ஆச்சரியம். என்ன என்று கேட்டபோது சைக்கிள் பார்க் கட்டணம் பத்து ரூபா தருமாறு கேட்டார். நான் பற்றுச்சீட்டைக் கேட்டேன் தந்தார் அதுதான் கீழே பதிவிடப்பட்டுள்ளது. நான் காசைக் கொடுத்துக்கொண்டே கடைக்கு வந்தால் பார்க் காசு தர வேண்டுமா? என வினாவினேன். கடைக்கு வந்தால் தேவையில்லை. சந்தைக்குள் சென்றால் தரவேண்டும் என்றார். அருகில் நின்ற ஆட்டோ சாரதியும் என்னோடு துணைக்கு வந்து கேள்வி கேட்டார். பாரக் என்றால் முறையாக அமைத்துதானே நடத்த வேண்டும்என்றார். காசை அறவிட்டவர் பதிலேதுமின்றி திரும்பிவிட்டார்.
இப்போது நான் தொடுக்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விடையளிப்பார்களா?
1. மருதனார்மடம் சந்தைத் தொகுதியில் வாகன மற்றும் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் என குறித்தொதுக்கப்பட்ட பகுதிகள் எவை?
2. பாதுகாப்பு நிலையம் என்றால் என்ன? கள்வர்களிடமிருற்து பாதுகாப்பது மட்டும்தானா அவ்வது வெயில், மழை என்பவற்றிலிருந்தும் பாதுகாப்பதா?
3. பற்றுச்சீட்டை எப்போது வழங்குவது? தரிப்பிடத்தில் நிறுத்தும் போதா? அல்லது தரிப்பிடத்திலிருந்து எடுத்துச் செல்லும் போதா?
4. சந்தைக்குள் செல்பவரகளுக்கு கட்டணமென்றால் உள்நுழையும் போது ஏன் பற்றுச்சீட்டைத் தரவில்லை.
5. வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு சைக்கிளுக்குரியது மோட்டார் சைக்கிளுக்குரிய பற்றுச்சீட்டு ஏன் வழங்கப்படவில்லை?
6. ஒரே இலக்கமிடப்பட்ட பற்றுச்சீட்டின் பெறுமதி என்ன 5 ரூபாவா? அல்லது 5 உம் 5 உம் பத்தா?
7. திறந்தவெளியெல்லாம் பாதுகாப்பு நிலையமா?
8. சில சமயம் களவு போனால் இவர்கள் பொறுப்பெடுப்பார்களா? அல்லது நீங்கள் உரிய பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தாமல் இங்கே விட்டதால் நாம் பொறுப்பெடுக்க முடியாது என கூறுவார்களா?
9.வலிகாமம் தெற்கு பிரதேச சபையினருக்கும் இது தெரியுமா?
10. அல்லது சந்தையை குத்தகை எடுத்தவருக்கும் இது தெரியுமா?